Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பாவம் மக்கள்!


தூய்மையான தமிழ்த் தேசியவாதிகளே, வறட்டுத் தமிழ்த்தேசியம் பேசி, உங்களைத் தவிர அனைவருக்கும் “துரோகிகள்” பட்டத்தை இலவசமாக வழங்கிக் கௌரவிப்பவர்களே, படையினருடன் தேனீர் அருந்துபவரை, படமெடுப்பவரை, படையினரைப்பார்த்து சிரி்ப்பவரை, கதைப்பவரை எல்லாம் துரோகிகள் ஆக்குபவர்களே, இலங்கை அரசாங்கத்தின் தேர்தல்கள் அனைத்தையும் நீங்கள் புறக்கணிக்க வேண்டும் அல்லவா?

சரி, உங்கள் மக்கள் பலத்தை நிரூபிப்பதற்கு ஜனநாயக தேர்தல்களில் பங்கெடுப்பதானால், பின்னர் ஒற்றை ஆட்சிக் குடியரசின் கீழ், பிரிக்கப்படாத இறைமையின் கீழ், பிரிக்கப்பட முடியாத நாட்டின் கீழ் சத்தியப்பிரமாணம் எடுப்பதை தவிர்த்து பதவிகளை துறப்பது தானே நியாயம்?


இல்லை உங்கள் குரல்களை ஒலிக்கவிட, கொள்கைகளை பரப்பிவிட நாடாளுமன்றை, மாகாண சபைகளைப் பயன்படுத்த வேண்டும் ஆக இருந்தால் கொள்கைப் பற்றில் உறுதியான தலைவர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொள்கையை அசுத்தப்படுத்தாமல், உங்கள் இரன்டாம் 3 ஆம் நிலைத் தலைவர்களை அல்லவா நாடாளுமன்றம் மாகாண சபைகளுக்கு அனுப்ப வேண்டும்.

உலகின் முன்னணிப் போராட்டங்களை நடத்திய இடதுசாரி இயக்கங்கள், கம்யூனிசக் கட்சிகள் பல இந்த உத்திகளைத் தானே கையாண்டன. உங்களால் மட்டும் ஏன் முடியவில்லை?

ஆயிரமாயிரம் விமர்சனங்களுக்கு அப்பால், 6ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்த்து, இலங்கை நாடாளுமன்றில் சத்திப்பிரமானம் எடுக்க மறுத்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் – எதிர்கட்சித் தலைவர் – அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதிவிகளை, உறுப்புரிமைகளை 1983ல் தூக்கி எறிந்தார்கள்.

அதன் பின் தமிழ்த்தேசியவாதிகள் அல்லது தூய தமிழ்த்தேசியவாதிகள் எவராவது, தமிழ் மக்களின் உரிமைகளை முன்னிறித்தி, உங்கள் நாடாளுமன்ற பதவிக் காலம் முடிவதற்கு முன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையோ, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய சிறப்புரிமைகள் சலுகைளையோ, குறைந்தது மாதிவெலவில் வழங்கும் தங்கும் விடுதியையாவது துறந்தீர்களா? இல்லையே... அரசாங்கத்தின் அனைத்து விதமான வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு, மற்றவர்களைத் துரோகிகள் ஆக்குவதுதான், தூய தமிழ்த் தேசியமும் தேசவிடுதலையுமா?

05.08.1983 அன்று 6வது திருத்தச் சட்டத்தை ஜே. ஆர் ஜெயவர்த்தன அரசாங்கம் நிறைவேற்றியது. அதன்படி மூன்று மாதங்களுக்குள் அரச பதவிகளில் உள்ளவர்கள் அனைவரும் 6வது திருத்தச் சட்டத்தின் மீது சத்தியப் பிரமாணம் எடுத்தாக வேண்டும். இந்த பிரேரனைக்கு 150 பேர் ஆதரவளித்திருந்தனர். எந்த எதிர்ப்புமின்றி 6 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதே மாதம் அத்தாட்சிப்படுத்தப்பட்ட சட்டம், வேகமாக அமுல்படுத்தப்பட்டது.

சகல அரசாங்க ஊழியர்களும் பிரிவினைக்கு எதிராகவும், அரசியலமைப்புக்கு விசுவாசமாகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள வேண்டும் என ஜே.ஆர் அரசாங்கம் சகல அரச காரியாலயங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியதன் மூலம் அவ்வூழியர்கள் விரும்பியோ விரும்பாமலோ பிரமாணம் எடுக்க வலிந்து தள்ளப்பட்டனர்.


தமிழர் கூட்டணியின் மறுப்பும் பதவி துறப்பும்...

தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனிநாட்டுக்கான கோரிக்கையைத் முன்னிறுத்தி, அதற்கான மக்களாணையைப் பெற்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியினர், அந்த மக்களாணைக்கு முற்றிலும் முரணான, தாம் முன்னிறுத்திய அடிப்படைக் கொள்கைக் எதிரான, 6ஆவது திருத்த சட்டத்தின் கீழான சத்தியப்பிரமாணத்தை நிராகரித்தனர்.

அரசியலமைப்பை பாதுகாத்து 6 வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதாக 1983 ஓகஸ்ட் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவேண்டும்.

“இலங்கை ஜனநாயகக் குடியரசின் அரசியல் அமைப்பை ஆதரித்துப் பாதுகாப்பதுடன், இலங்கையில் தனிநாடு ஒன்றை உருவாக்குவதற்கு, ஆதரவளிக்கவோ, ஊக்குவிக்கவோ, நிதியுதவி அளிக்கவோ, அதற்கான பிரசாரத்தை முன்னெடுக்கவோ மாட்டேன் என உறுதியளித்து சத்தியம் செய்கிறேன்” எனத் தெரிவித்து கையெழுத்திட வேண்டும். இந்தச் சத்தியப் பிரமாணத்தை செய்ய கூட்டணி மறுத்தது.

1977 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட கூட்டணி, ஆறு வருடங்கள் பூர்த்தியாகும் தினமான 1983 யூலை 22க்குப் பின்னர் நாடாளுமன்றம் செல்வதில்லை என்கிற முடிவை எடுத்திருந்தது. நாடாளுமன்றத்தின் காலம் முடிவடைந்தும் கூட அரசாங்கம் பதவியை நீடிபதற்காக நடத்திய சர்வஜன வாக்கெடுப்பையும் “அது ஜனநாயக விரோதம்” எனக் கூறி கூட்டணி எதிர்த்தது.

ஏற்கெனவே எடுத்த முடிவு மற்றும் 6 வது திருத்தச் சட்டத்தின்படி சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை. 3 மாதங்கள் விடுமுறை அனுமதி பெறாமல் 17 பேரும் நாடாளுமன்றத்துக்குச் செல்லவும் இல்லை. அதனால் அவர்கள் அனைவரும் பதவியிழந்தனர். இதனைத் தொடர்ந்து 5 வருடங்களும் 8 மாதங்களும் கூட்டணியின் இடம் வெற்றிடமாகத் இருந்தது.

கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தூக்கி எறிந்த எதிர்க்கட்சித் தலைமைக்கு தகுதி பெற்றிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அதன் தலைவரான அனுரா பண்டாரநாயக்க எதிர்க் கட்சித் தலைவரானார். நவம்பர் 8 அன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 9 உறுப்பினர்களும், மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, கொம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சரத் முத்தெட்டுவேகம ஆகிய 11 பேரின் ஆதரவுடன் அவர் எதிர்க்கட்சி தலைவரானார்.

தமித்த் தேசியக் கட்சிகளே – தமிழ்த் தேசிய கூட்டணிகளே – கூட்டமைப்புகளே – முன்னணிகளே, பிரமுகர்களே, பாவம் மக்கள் அவர்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றாதீர்கள். நட்டாற்றில் விட்டுவிடாதீர்கள்.

வன்னியிலும், வாகரையிலும், கட்டைப்பறிச்சானிலும்,சம்பூரிலும், திருக்கோவிலிலும், யாழ்ப்பாணத்தின் பின்தங்கிய கிராமங்களிலும் வாழும் மக்களின் கண்களில் அழுவதற்கு கண்ணீர் இல்லை. பேசுவதற்கு குரல்கள் இல்லை.

உங்களால் முடியாவிட்டால் அவர்களை விட்டு விடுங்கள். போராடும் சக்தி இருந்தால் அவர்கள் தாமாகப் போராடட்டும். இல்லையேல் ஆளும் அரசுகளை ஆதரித்து வாழப் பழகட்டும்... பாவம் மக்கள்..

நடராஜா குருபரனின் முகநூல் பதவில் இருந்து. 

No comments