கொரோனா வைரஸினால் உயிரிழந்த 20 நாட்களேயான சிசுவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்து உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிசுவின் பெற்றோரான, கொழும்பு-15 ஐச் சேர்ந்த மொஹம்மட் மஹ்ரூப், மொஹம்மட் பாஹிம் மற்றும் பாத்திமா சப்னாஸ் ஆகியோரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த 20 நாட்களேயான தங்களது குழந்தையின் மரணம் சந்தேகத்திற்குரியது என வைத்திய அறிக்கை ஒன்றை பெற்று விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு அந்த மனுவில் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திடீரென மரணித்த சிசுவின் உடலை தகனம் செய்வதற்கான எவ்வித தேவையும் இருக்கவில்லை எனவும் கொவிட் காரணமாக உயிரிழந்த 19 பேரின் சடலங்கள் அவ்வேளையிலும் பிரேத அறைகளில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன, ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜி.விஜயசூரிய, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ஆரம்ப நிலை சுகாதார சேவை தொற்றுநோய் மற்றும் பொவிட் ஒழிப்பு விவகாரம் தொடர்பிலான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ள, சுகாதார அமைச்சின் சஞ்ஜீவ முனசிங்க, அரச செயலாளர் டொக்டர் அமல் ஹர்ஸ டி சில்வா மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பின்னணி.
பிறந்து 20 நாட்களேயான சிசுவொன்று, கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்தநிலையில் டிசம்பர் 8ஆம் திகதி உயிரிழந்தது.
குறித்த சிசுவின் உயிரிழப்புக்கான காரணம் கொரோனா தொற்றுடன் நிமோனியா காய்ச்சல் என அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் உயிரிழந்த குறித்த சிசுவின் சடலத்தை ஏற்க பெற்றோர் மறுத்திருந்தனர். அத்தோடு, பிசிஆர் சோதனை குறித்து தங்களிற்கு கரிசனைகள் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் தங்களது மத நம்பிக்கையின் அடிப்படையில் குழந்தையின் உடலை அடக்கம் செய்யுமாறு தாங்கள் வேண்டுகோள் விடுத்ததாகவும் எனினும் அதனை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளாது தகனம் செய்தனர் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.









No comments