மருதனார்மடம் சந்தையில் 394 பேரிடம் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கே கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர், த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
முன்னதாக 31 பேருக்கு கொரோனோ தொற்று என முன்னதாக தகவல் வெளியாகி இருந்தன.அவர்களில் 6 பேருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏனையவர்களுக்கு பெறப்பட்ட மாதிரிகளில் போதுமான கூறுகள் இல்லை எனவும், அவர்களிடம் மீளவும் மாதிரிகள் பெறப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்ட குடும்பத்தலைவரின் மனைவி (வயது-38) மகள் (வயது-12), மகன்கள் (6 மற்றும் 3 வயதுடைய) இருவர், மாமியார் (வயது-63) மற்றும் மைத்துனர் (வயது-25) ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுமுழுவதும் எழுமாறாக தெரிவு செய்யப்படுவோரிடம் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதனடிப்படையில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் மருதனார்மடம் சந்தி முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் உள்ள சாரதிகளிடம் கடந்த புதன்கிழமை மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
அந்தப் பரிசோதனையின் முடிவில் மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரியாகவும் முச்சக்கர வண்டி சாரதியாகவும் உள்ள 38 வயதுடைய குடும்பத்தலைவர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றிரவு கண்டறியப்பட்டது.
அதனையடுத்து அவர் கோவிட் - 19 சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அவரது குடும்பம் உடுவில் பிரதேச சபை ஒழுங்கையில் உள்ள அவர்களது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரனின் அறிவுறுத்தலில் மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வியாபார நிலையங்களில் உள்ளவர்கள் என 394 பேரிடம் இன்று சனிக்கிழமை மாதிரிகள் பெறப்பட்டன.
மாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அதன் முடிவு இன்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments