Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பலாலி விமான நிலையத்திற்கு தந்தை செல்வாவின் பெயரை சூட்டுமாறு கோரிக்கை



பலாலி விமான நிலையத்திற்கு தந்தை செல்வாவின் பெயரை சூட்டுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம், வீ. ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இலங்கை வாழ் அனைத்து இன மக்களின் நன்மதிப்பைப்பெற்று ‘ஈழத்து காந்தி’ என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் தந்தை செல்வா.

1947ஆம் ஆண்டு இலங்கையின் முதல் நாடாளுமன்றத்திலே அங்கம் வகித்தவர். சட்டத் துறையில் மிகவும் புகழ் பெற்று பிரித்தானியாவின் ஆட்சிக் காலத்திலேயே சட்டவல்லுனராக திகழ்ந்தவர்.

இலங்கையின் இனப்பிரச்சனைக்கு சமஷ்டி முறையிலான ஒரு தீர்வே சிறந்தது என கூறிவந்தாலும் அதற்கு மாற்றாக இனப்பிரச்சனையை சுமூகமாக தீர்க்கும் நோக்கத்தோடு ‘பண்டா செல்வா’ மற்றும் ‘டட்லி செல்வா’ ஒப்பந்தங்களை செயற்படுத்த அன்றைய அரசுகளுக்கு ஆலோசனைகளை முன்வைத்தார்.

துரதிஷ்டவசமாக அவரின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளாததால் நமது நாடு மிகப் பெரும் அழிவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

தன்னலம் கருதாது நாட்டையும் மக்களையும் நேசித்த ஒரு ஒப்பற்ற தலைவர் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

ஆரம்பத்தில் தமிழ் மக்களுக்காக ‘தமிழரசுக் கட்சியை’ ஸ்தாபித்தார். அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை உணர்ந்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக அனைத்து தமிழ் மக்களையும் ஒன்று திரட்டி ‘தமிழர் விடுதலைக் கூட்டணியை’ 1972ம் ஆண்டு ஸ்தாபித்தார். இறுதிவரை மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தார்.

இவ்வாறான தலைவர்களை நாடும் மக்களும் மறந்து விடக்கூடாது. அவரின் பெயர் என்றென்றும் நிலைத்திருக்க பலாலி விமான நிலையத்திற்கு ‘தந்தை செல்வா சர்வதேச விமான நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்

No comments