கிளிநொச்சி , வட்டக்கச்சி பகுதியில் குடும்பஸ்தரை கத்தியால் குத்தி கொலை செய்த சந்தேகநபரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை கத்திக்குத்து தாக்குதலில் பலியானவரின் மனைவி மற்றும் சகோதரிகள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 10 ஆம் திகதி வட்டக்கச்சி பகுதியை சேர்ந்த அருளம்பலம் துஷ்யந்தன் என்பவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர்கள், அவர் மீது தாக்குதலை மேற்கொண்டு கத்தியால் குத்தியுள்ளார். குறித்த சம்பவத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி , சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை சந்தேகநபரின் குடும்பத்தினர் பயம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி வேறு இடத்தில் தற்காலிகமாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் வீட்டில் உள்ள சில ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்வதற்காக வீட்டார் பொலிசாரின் பாதுகாப்புடன் வீட்டிற்கு சென்ற போது, அங்கு ஊரவர்கள் இறந்தவரின் மனைவி , சகோதரர்கள் உள்ளிட்ட உறவினர்கள் கூடி இறந்தவருக்கு நீதி கிடைக்க வில்லை , பொலிஸார் பக்கசார்பாக நடந்து கொள்கின்றனர் என குற்றம் சாட்டியுள்ளனர்.
அதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. அவ்வேளை சந்தேக நபரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து அங்கிருந்தவர்களை பொலிஸார் அப்புறப்படுத்த முற்பட்டு அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் கொலையானவரின் மனைவி மற்றும் சகோதரிகள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments