யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்ட நிலையில் நாளைக் காலை கிருமித் தொற்று நீக்கி விசிறப்பட்ட பின் பாடசாலை இடம்பெற அனுமதிக்கப்படும் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
பாடசாலைகள் மற்றும் பொது மைதானங்களில் விளையாட்டு நிகழ்வுகளை நடத்த சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது.
அதனால் யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்தியா மகா வித்தியாலய மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெறவிருந்த சனசமூக நிலையம் ஒன்றின் விளையாட்டு நிகழ்வை இடைநிறுத்தவும் மைதானத்தை வழங்க வேண்டாம் எனவும் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியினால் அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
எனினும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அனுமதியளித்துள்ளார் எனத் தெரிவித்து அதிபர், நிகழ்வை நடத்த அனுமதியளித்திருந்தார்.
சுகாதாரத் திணைக்களத்தின் ஆலோசனை பெறப்படாமல் விளையாட்டு நிகழ்வுக்கு அனுமதியளிக்கவேண்டாம் என தாம் அறிவுறுத்தியிருந்ததாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், சுகாதார மருத்துவ அதிகாரிக்கு தகவலளித்திருந்தார்.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் பாடசாலை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டது.
எனினும் விளையாட்டு நிகழ்வில் பங்கேற்றவர்கள் தொடர்பான விபரங்கள் பாடசாலை அதிபரினால் இன்று யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய வளாகத்தில் நாளைக் காலை கிருமி தொற்று நீக்கி விசிறிய பின்னர் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க சுகாதாரத் துறை அனுமதியளித்துள்ளது
No comments