கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் தாமிரா சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
மறைந்த இயக்குநர் கே. பாலசந்தரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய தாமிரா என்கிற காதர் முகைதீன் (வயது 52). 2010-ல் இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் உருவான ரெட்டைச் சுழி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்தில் பிரபல இயக்குநர்களான பாரதிராஜா, பாலசந்தர் நடித்திருந்தார்கள்.
இதன்பிறகு சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடித்த ஆண் தேவதை படத்தை இயக்கினார். பிறகு தொலைக்காட்சித் தொடர்களை இயக்கி வந்தார்.
கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளான தாமிரா சிகிச்சைக்காக சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
தாமிராவின் மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
No comments