Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அழிவிலிருந்து மீளும் வரிக்கழுதைப்புலிகள்!


உலகில் வேகமாக அழிந்துவரும் விலங்கினப் பட்டியலில் உள்ள வரிக் கழுதைப்புலிகளின் எண்ணிக்கை முதுமலை பகுதிகளில் மெல்ல அதிகரித்து வருவது காட்டுயிர் ஆய்வாளர்களை நம்பிக்கை அடையச் செய்துள்ளது.

இந்தியாவின் முதல் உயிர்ச் சூழல் மண்டலமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட நீலகிரி பல்லுயிர்ச் சூழல் மண்டலம், அழிவின் விளிம்பில் உள்ள பல்வேறு வகையான தாவரங்கள், பறவைகள் மற்றும் விலங்கினங்களின் கடைசிப் புகலிடமாக விளங்கி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


அழிவின் விளிம்பில் உள்ள விலங்கினங்களைப் பாதுகாக்க வனத்துறை மற்றும் காட்டுயிர் ஆய்வாளர்கள் பல்வேறு சிரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பயனாக உலகில் காடுகளில் வாழும் வங்கப்புலிகளின் எண்ணிக்கையை அதிகம் கொண்ட பகுதியாக முதுமலை விளங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. அதே போல் அரிதாகிவரும் பாறு கழுகுகள் பாதுகாப்பிலும் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மனித பார்வைக்கு தென்படுவதே மிக அரிதான விலங்காகக் கருதப்படும் வரிக்கழுதைப்புலிகள் (Indian striped hyena or Hyaena hyaena) முதுமலையின் வெளி மண்டல பகுதிகளில் தென்படுவது இவற்றின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் குறியீடாக இருப்பதாக ஆய்வாளர்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.


வரிக்கழுதைப்புலிகள் குறித்து ஊட்டி அரசு கலைக் கல்லூரியின் வன விலங்கு உயிரியல் துறையின் உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன், ``இயற்கையின் படைப்பில் எல்லா உயிரினங்களும் உன்னதமானதுதான். அதிலும் குறிப்பாக வனத்தின் தூய்மைப் பணியாளர்கள் என்று அழைக்கப்படும் கழுகு, நரி, கழுதைப்புலிகள் போன்றவை மிக மிக உன்னதமானவை. இவற்றுக்கு புலிகளைப் போன்று இறைச்சி தேவையில்லை. அவை உண்டு மிச்சம் வைத்த எலும்புகள் இருந்தாலே போதும். அவற்றை உண்டு நோய் தொற்றிலிருந்து காட்டையும் நம்மையும் காக்கும் தன்மை கொண்டவை.

வனத்தை ஒட்டிய பகுதிகளில் நடைபெற்ற கால்நடை வளர்ப்பால் அவற்றுக்கு கொடுக்கப்பட்ட வலி நிவாரணிகள் மற்றும் இறந்த கால்நடைகளின் இறைச்சியில் கலக்கப்பட்ட விஷம் போன்றவையும் இவற்றின் எண்ணிக்கையை வெகுவாகப் பாதித்தது. வனத்தில் பட்டி மாடுகள் வளர்ப்புக்கு தடை மற்றும் ஒன்றிணைந்த வனத்தை புலிகள் காப்பகமாக அறிவித்ததும் தற்போது இவற்றின் எண்ணிக்கையை மெல்ல அதிகரிக்கச் செய்துள்ளது. தற்போது முதுமலையில் 25 முதல் 30 வரை இவற்றின் எண்ணிக்கை இருக்கக்கூடும். இது நல்ல அறிகுறியாகப் பார்க்கிறோம்" என்றார் நம்பிக்கையுடன்.

வரிக்கழுதைப்புலிகளின் எண்ணிக்கை குறித்து தெரிவித்த முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளி மண்டல துணை இயக்குநர் ஸ்ரீகாந்த், ``2012 ஆண்டு முதல் 2020 ஆண்டு வரையிலான கேமரா பதிவுகளில் இவற்றை குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே காண முடிந்தது. ஆனால், 2019-20-ம் ஆண்டில் சீகூர் பகுதிகளில் 13 ஹைனாக்கள் கேமிராக்களில் பதிவாகி உள்ளன. தற்போது இவற்றை மசினகுடி பகுதிகளில் அவ்வப்போது காண முடிகிறது" என்றார்.

உலகில் மிக வேகமாக அழிந்துவரும் விலங்கினங்களின் பட்டியலில் உள்ள வரிக்கழுதைப்புலிகளின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்துவருவது ஆய்வாளர்களிடம் பெரும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

[குறிப்பு: வரிக்கழுதைப்புலிகளின் படங்கள் அனைத்தும் வனத்துறையின் கண்காணிப்பு கேமிராவில் பதிவானவை. வனத்துறையினரிடம் இருந்து பெறப்பட்டவை]

நன்றி :- விகடன். 

No comments