எனது அரசாங்கம், 2030ஆம் ஆண்டுக்குள் எமது தேசிய உற்பத்தியை அதன் தற்போதைய மட்டத்திலிருந்து 8,000 டொலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியாக இரட்டிப்பாக்கவும் ஒரு தசாப்த கால மாற்றம் மற்றும் துரித பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்ளும் இலட்சிய திட்டங்களையும் கொண்டுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2021 இலங்கை முதலீட்டு மன்றத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இந்த நிகழ்வானது, இலங்கை தனது பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும் வழங்கும் பல்வேறுபட்ட முதலீட்டு வாய்ப்புகளின் முழுமையான பார்வையை தருகிறது.
இந்த மன்றமானது, முதலீட்டுச் சபை, கொழும்பு பங்குச் சந்தை மற்றும் இலங்கை வர்த்தகச் சங்கம், முக்கிய கொள்கை வகுப்பாளர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் வர்த்தகத் தலைவர்களை ஒன்றிணைக்கிறது. இது, எங்கள் முதலீட்டுச் சூழலைப் பற்றிய வலுவான உரையாடல் மற்றும் தகவல் பகிர்வை ஊக்குவிப்பதுடன், நேரடி முதலீடுகளுக்கான வாய்ப்புகளையும் மூலதனச் சந்தைகள் மற்றும் கடன் சந்தைகளில் உள்ள வாய்ப்புகளையும் எடுத்துக்காட்டுகிறது.
இந்த முதலீட்டு மன்றம், இலங்கைக்கு ஒரு முக்கியமான நேரத்தில் இடம்பெறுகிறது.
எனது அரசாங்கம், 2030ஆம் ஆண்டுக்குள் எமது தேசிய உற்பத்தியை அதன் தற்போதைய மட்டத்திலிருந்து 8,000 டொலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியாக இரட்டிப்பாக்கவும் ஒரு தசாப்த கால மாற்றம் மற்றும் துரித பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்ளும் இலட்சிய திட்டங்களையும் கொண்டுள்ளது.
எமது தனித்துவமான புவிசார் மூலோபாய நிலை, அரசியல் ஸ்திரத்தன்மை, வலுவான நிறுவனங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு, கல்வியறிவு மற்றும் திறமைவாய்ந்த தொழிற்படை, உயர் வாழ்க்கைத் தரம் என்பன, இலங்கையின் பலமாகக் காணப்படுகின்றன. எமது வளர்ச்சி இலக்குக்கான தளத்தை அமைப்பதற்கு, இவை எமக்கு உதவும்.
மேலும், எமது உட்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து மின் உற்பத்தியை அதிகரித்தல், வீதிகள் மற்றும் புகையிரத வலையமைப்புகளை மேம்படுத்துவதன் ஊடாகத் தொடர்பினை மேம்படுத்தல், எமது துறைமுகங்களை மேலும் விரிவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய அனைத்தும், எமது அபிவிருத்தி முயற்சிகளுக்கு வசதியளிப்பதாக அமைந்திருக்கின்றன.
ஸ்திரமான பெரும் பொருளாதார சூழலில், கொள்கை ஸ்திரத்தன்மையையும் நிலைத்தன்மையையும் பேணுவதற்கு நாம் மிகவும் உறுதிபூண்டுள்ளோம். முதலீட்டாளர்களுக்கு அதிக அக்கறை, வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எங்கள் சட்ட மற்றும் ஒழுங்குமுறைக் கட்டமைப்புகளில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. தேவையற்ற அதிகாரத்துவ முறைமைகள் அகற்றப்பட்டு, வர்த்தகத்தை எளிதாக்குவதை உறுதி செய்வதற்கான நடைமுறைகள் நெறிப்படுத்தப்படுகின்றன.
இலங்கையின் ஜனாதிபதி என்ற வகையில், முதலீட்டுக்கு ஏற்றவாறு எமது சூழலை மேலும் மேம்படுத்துவதனூடாக, இந்த மாற்றங்களைக் காணவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
இலங்கையின் பல பொருளாதாரத் துறைகளில், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வருமானத்தை அளிக்கக்கூடிய கணிசமான வாய்ப்புகள் உள்ளன.
முக்கியமாக உலகளாவிய மையங்களிலிருந்து சில மணிநேரத் தொலைவில் அமைந்துள்ள புவிசார் மூலோபாய அமைவிடத்துடன், தெற்காசியா முழுவதிலும் சிறந்த இணைப்பினைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை விளங்குகிறது. வர்த்தகத் தலைநகரான கொழும்பு, இப்பிராந்தியத்தில் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் வாழ்வதற்குப் பொருத்தமான நகரங்களில் ஒன்றாகும்.
கொழும்புத் துறைமுக நகரத்திட்டத்துடன் இந்த நகரம் வழங்கும் பல வாய்ப்புகள், விரைவில் பெரிதும் முன்னேற்றமடையும். இது, உலகத்தரம்வாய்ந்த வதிவிட, வர்த்தக, சமூக மற்றும் பொழுதுபோக்கு வசதிகளைக் கொண்டிருக்கும் புதிய நகர வடிவமாக விளங்கும்.
இந்தத் துறைமுக நகரத்தை, உலகில் வேகமாக வளர்ந்துவரும் ஒரு பிராந்தியத்துக்கான முக்கிய சேவை மையமாக மாற்றுவதே எமது தொலைநோக்காகும். அதன் குடியிருப்பாளர்கள், உற்பத்தித் திறன்வாய்ந்த பணிகளைச் செய்யத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும் அதேநேரத்தில், பழைய மற்றும் புதுமை இரண்டையும் சிறப்பாக இணைக்கும் ஒரு துடிப்பான வெப்பமண்டல கடற்கரைச் சூழலில், மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவித்து மகிழ்வார்கள்.
பரந்த பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வர்த்தகங்களுக்கு, விசேட சலுகைகள் மற்றும் விலக்களிப்புகளை உறுதி செய்வதற்கான விசேட சட்டம் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. இங்கு முதலீடு செய்வதன் மூலம், துறைமுக நகரம் வழங்கும் தனித்துவ பலத்தையும் பல்வேறு வாய்ப்புகளையும் முழுமையாகப் பயன்படுத்த அனைத்து நாடுகளிலும் உள்ள வர்த்தகத் தலைவர்களை நாம் ஊக்குவிக்கிறோம்.
இலங்கையானது, கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் மையமாக பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. கொழும்பிலும் ஹம்பாந்தோட்டையிலும் உள்ள உலகத் தரம்வாய்ந்த துறைமுக உட்கட்டமைகளால், இந்து சமுத்திரத்தில் பயணிக்கும் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களுக்கும்கூட சேவைகளை வழங்கக் கூடிய இயலுமையை எமது நாடு, கொண்டுள்ளது.
எனவே, பிராந்தியத்திற்கான கப்பல் போக்குவரத்து மற்றும் தங்குமிட மையமாகவே எமது நாடு நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதனால், இத்துறைக்கான முதலீடுகளை நாங்கள் அதிகளவில் ஊக்குவிக்கிறோம். இதற்கு வசதியளிப்பதற்காக, இத்தகைய முதலீடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் மரபு ரீதியான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு திருத்தம் செய்யப்படுகின்றன.
மிகவும் வளமான சூழலைக் கொண்டுள்ள இலங்கை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, வளமானதொரு விவசாயப் பாரம்பரியத்தை மேற்கொண்டு வருகிறது.
காலநிலை மாற்றமானது, உலகெங்கிலும் உணவுப் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறி வரும் சூழ்நிலையில், இந்த வளமான பாரம்பரியத்தை, புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் ஒன்றிணைத்து, வியக்கத்தக்க வகையிலும் பேண்தகு அடிப்படையிலும் எமது விவசாய உற்பத்தியை மேம்படுத்த முயற்சிக்கிறோம்.
ஆரோக்கியமான, சேதன முறை விவசாயத்தை ஊக்குவிப்பதில் எனது அரசாங்கம் ஒர் உறுதியான கொள்கை நிலைப்பாட்டை எடுத்துள்ளது. எதிர்காலத்தில், இலங்கையினால் பிராந்தியத்தில் உள்ள அதிகரித்த கேள்விகளைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு உயர்தரமான விவசாய உற்பத்திகளை, சுகாதாரக் கரிசனையுடன் வழங்க முடியும் என்று நான் நம்புகிறேன். இந்தச் சூழலில், முதலீட்டுக்கான பல வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
நாட்டின் வனப்பகுதியை மேலும் அதிகரிப்பதற்கான எமது தேசிய உறுதிப்பாட்டைக் கருத்திற்கொண்டு, நிலப் பயன்பாட்டை மேலும் அதிகரிக்காமல், எமது விவசாயத் தளத்தின் உற்பத்தித்திறன் மேம்படுத்தப்பட வேண்டும்.
எனவே, சேதன முறையிலானதும், ஆரோக்கியமானதும், நிலையானதுமான வழிகளில் விளைச்சலை அதிகரிக்கக்கூடிய புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாய நடைமுறைகளிலான முதலீடுகளை நாங்கள் வரவேற்கிறோம். எங்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் கடற்றொழில் துறைகளின் உற்பத்தித்திறனை நிலைபேறாக அதிகரிக்கும் முன்னேற்றங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
எமது விவசாய உற்பத்திகள் மற்றும் தேயிலை, இறப்பர், தென்னை போன்ற எமது பாரம்பரிய ஏற்றுமதிப் பயிர்களின் ஏற்றுமதித் திறனை அதிகரிக்கக்கூடிய பெறுமதி சேர்க்கும் வர்த்தகங்களுக்கான முதலீடுகளையும் நாம் பெரிதும் ஊக்குவிக்கின்றோம்.
இலங்கை, தனது தொழிற்றுறை தளத்தை விரிவுபடுத்த முயற்சித்து வரும் நிலையில், அதிகரித்த மின் உற்பத்தி மிக முக்கியமான தேவைப்பாடுகளில் ஒன்றாகும்.
புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் சுத்தமான மீள்பிறப்பாக்கச் சக்தி மூலங்களில் இருந்து 2030ஆம் ஆண்டளவில் எமது தேசிய மின்சார தேவைகளில் 70 சதவீதமான பங்களிப்பை உறுதி செய்வதற்கும் எனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
எனவே, எமது மின்சார விநியோகத்தை நிலையானதாக அதிகரிக்கக் கூடிய, தொழில்மயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான தளத்தை அமைக்கக்கூடிய பாரியளவிலான சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்களில் முதலீடுகளைச் செய்ய, முதலீட்டாளர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம்.
பல உயர் தொழில்நுட்பத் தொழில்களில் பயன்படுத்தப்படும் பல மூலப்பொருட்களின் அபரிமிதமான வளங்கள் இலங்கையில் உள்ளன. இந்த வளங்களுக்கு பெறுமதி சேர்க்கின்ற, எதிர்காலத்தில் உலகளாவிய சந்தைக்கு இலத்திரனியல் உதிரிப்பாகங்களின் உற்பத்தியாளராக மாறுவதற்கான பாதைக்கு நாட்டைக் கொண்டுவருவதற்கான உற்பத்தித் தொழில்களில் முதலீடுகளை ஊக்குவிக்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.
குறிப்பாக, இலங்கையின் தகவல் தொழில்நுட்பத்துறையானது, வலுவான நிலையில் உள்ளது. சர்வதேச அளவில் தங்கள் சின்னத்தை பதித்த பல நிறுவனங்கள், எமது நாட்டில் உள்ளன. மேலும், உயர்தரக் கல்வி நிறுவனங்களானவை, ஒவ்வோர் ஆண்டும் இந்தத் துறையில் பல திறமையான தொழிலாளர்களை உருவாக்குகின்றன.
நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் தற்போதைய கல்விச் சீர்திருத்தங்கள், எதிர்காலத்தில் எமது தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களின் தரத்தையும் அளவையும் மேலும் அதிகரிக்கும். இதுபோன்ற திறன் விருத்திக்கு மேலதிகமாக, அரசாங்கம் பல முன்னோடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தகவல் தொழிநுட்பப் பூங்காக்கள் உள்ளிட்ட புதிய உட்கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் இலங்கையைத் தலைமையகமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான வரி விலக்குக் கொள்கை உள்ளிட்ட ஆதரவான கொள்கைப் பொறிமுறைகளை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
மில்லியன் கணக்கான டெராபைட் தரவை அனுப்பும் கடலுக்கடியில் உள்ள பாரிய கேபிள்களுக்கு, இலங்கையின் புவியியல் அருகாமையானது. பிராந்தியத்தின் தகவல் தேவைப்பாடுகளுக்கான சேவைகளை வழங்கும் தரவு மையங்களுக்கும் ஏனைய செயற்பாடுகளுக்கும், ஒரு கவர்ச்சிகரமான இடமாக அமைகிறது. நாட்டின் சட்ட மற்றும் ஒழுங்குமுறைச் சூழலை உலகளாவிய தரத்துக்கு ஏற்பக் கொண்டுவருவதற்காக வடிவமைக்கப்பட்டு வரும் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு குறித்த புதிய சட்டத்துடன், இதற்கான சாத்தியம் மேலும் வலுப்படுத்தப்படுகிறது.
நீண்ட காலமாக உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்துக்குரிய இடமாக இலங்கை இருந்து வருகிறது. தற்போதைய கொவிட் 19 பெருந்தொற்றினால், இத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், தொற்றுநோய்க்கு பிந்தைய சூழலைப் பயன்படுத்திக்கொள்ள இலங்கை அதன் துடிப்பான சுற்றுலாத் துறைக்கு புத்துயிர்ப்பளிக்க முயற்சித்து வருகிறது.
எனவே, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஹோட்டல்கள், பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் அனுபவமிக்க சுற்றுலாத் திட்டங்கள் ஆகியவற்றுக்கான முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன.
உலகளவில் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகள் மற்றும் உலகத் தரம்வாய்ந்ததும் அதிக தகுதியும் அனுபவமும் வாய்ந்த மருத்துவ நிபுணர்களால், நாட்டின் வலுவான பொதுச் சுகாதார முறைமை வளர்ச்சியடைந்துள்ள நிலையில், வளர்ந்து வரும் உலகளாவிய மருத்துவச் சுற்றுலாத் தொழிற்றுறையிலிருந்து பயனடைய இலங்கையும் முனைப்பாக உள்ளது.
அதனால், எமது வளமானதும் பாரம்பரியமானதுமான சுகாதாரப் பராமரிப்பு மற்றும் ஆயுர்வேத பாரம்பரியத்தை முழுமையாக மேம்படுத்தும் மருத்துவ சுற்றுலாத் திட்டங்களுக்கும் முதலீடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
பல்வேறு வகையான கவர்ச்சிகளுடன், பலமான உட்கட்டமைப்பு, உயர்தரமான வாழ்க்கை மற்றும் அறிவாற்றல்மிக்க இளைஞர்களைக் கொண்ட இலங்கையில், முன்னணிப் பல்கலைக்கழகங்களுக்கான வளாகங்களை அமைக்கவும் பிராந்தியத்தைச் சேர்ந்த மாணவர்களை ஈர்க்கவும் முக்கியத்துவமான இடமாக இருக்க முடியும்.
இந்த உரையில் நான் குறிப்பிட்ட பல துறைகளுக்கான முக்கிய முதலீடுகளைப் போலவே, முதலீடுகளுக்கான ஊக்குவிப்புகளை வழங்கவும் எனது அரசாங்கம் தயாராக உள்ளது.
இந்த மூன்று நாள்களில் இந்த நிகழ்வில் பங்கேற்பவர்கள், மேற்கூறிய விடயங்களையும் இலங்கை வழங்கும் பல வாய்ப்புகளையும் விரிவாக ஆராய முடியும்.
மிக முக்கியமாக, உயர் மட்டக் கொள்கை வகுப்பாளர்களுடனும் தொழில்நுட்ப வல்லுநர்கள், திட்ட உரிமையாளர்கள் மற்றும் இலங்கையில் உங்கள் முதலீட்டு அபிலாஷைகளை ஆதரிக்கக்கூடிய பங்காளர்களுடனும் நீங்கள் நேரடியாகத் தொடர்புகொள்ள முடியும்.
இலங்கை அரசாங்கம் முன்னோக்கிச் செயற்படுவதுடன், வர்த்தகத் துறைக்குச் சார்பாகவும் செயற்படுகிறது. எமது பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முதலீடுகளை, நாங்கள் மிகவும் சாதகமாகப் பார்ப்போம். மேலும், இத்தகைய முதலீடுகளின் வெற்றிக்கான சிறந்த சூழலை உருவாக்குவதற்கு, எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.
இலங்கையை முன்னேற்றுவது மட்டுமன்றி, பல துறைகளில், பல்வேறு வழிகளின் மூலம் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய மதிப்பை உருவாக்கும் அதே நேரத்தில், முழுப் பிராந்தியத்திலும் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு தேசிய மாற்றத்தைக் கொண்டுவரத்தக்க சூழலில் நாங்கள் இப்போது இருக்கிறோம்.
இலங்கையில் முதலீடு செய்வதன் மூலம் இந்த முக்கியமான மாற்றத்துக்கான பயணத்தில் எங்களுடன் இணைந்துகொள்ளுமாறு உங்களை அழைக்கிறேன். என தெரிவித்தார்.







No comments