இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் டிப்பர் வாகனச் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு சின்ன ஊரணியில் உள்ள இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழந்திரனின் இல்லத்தில் இன்று மாலை 5.10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பதில் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்ததாவது,
இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் கான்டபிள் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு மணல் டிப்பர் சாரதிக்கும் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.
டிப்பர் சாரதி இன்று முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டார். உயிரிழந்த சாரதியின் சடலம் மட்டக்களப்பு மருத்துவமனை வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சம்பவம் நடந்த நேரத்தில் இராஜாங்க அமைச்சர் வீட்டில் இல்லை.
துப்பாக்கிச் சூடு குறித்து மட்டக்களப்பு மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.










No comments