யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக, வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தில், இன்றைய தினம் (28) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநகர சபை உறுப்பினர் ஜெ.ரஜீவ்காந்தால், இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜுன் 25ஆம் திகதியன்று நடைபெற்ற யாழ். மாநகர சபை அமர்வில், மாநகர சபை உறுப்பினர் வ.பார்தீபனை நோக்கி 'நாய்' என விழித்து பேசிய குற்றச்சாட்டில், மாநகர சபை உறுப்பினர் ஜெ.ரஜீவ்காந்தை, ஒரு மாத காலத்துக்கு சபை அமர்வில் கலந்துகொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தடை சட்டமானது, முரணானதெனக் குறிப்பிட்டு, வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தில், மாநகர சபை உறுப்பினர் ஜெ.ரஜீவ்காந்த், முதல்வருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த 25ஆம் திகதி யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வில் சக உறுப்பினர் வ.பார்தீபனுடன் வாக்குவாதப்பட்டு " நாய்" என விளித்த உறுப்பினர் ரஜீவ்காந்த் தான் சபையில் மன்னிப்பு கோர மாட்டேன் எனவும் , அநாகரிகமான சொற்களை மீள பெற மாட்டேன் எனவும் கூறினார்.
அதனால் அவரை சபை நடவடிக்கையில் இருந்து ஒரு மாத காலத்திற்கு இடைநீக்க முடிவெடுக்கப்பட்டது.
அந்த முடிவுக்கு சபையில் 23 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். அவருடன் வாக்குவாதப்பட்ட சக உறுப்பினரான வ.பார்தீபன் உள்ளி ட்ட 12 உறுப்பினர்கள் நடுநிலைமை வகித்திருந்தனர். தன்னை சபை நடவடிக்கையில் இருந்து நீக்க கூடாது என ரஜீவ்காந்த்தும் மற்றுமொரு உறுப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சபையின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் தீர்மானத்திற்கு அமைவாக ரஜீவ்காந்த் சபை நடவடிக்கையில் ஒரு மாத காலத்திற்கு ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







No comments