மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கோவிட்-19 நோயினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்ய வவுனியா நகர சபையின் எரிவாயு தகன இந்து மயானத்துக்கு அனுப்ப வேண்டாம் என்று அந்த மாவட்டங்களின் செயலாளர்களுக்கு வவுனியா மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார்.
வவுனியா பூந்தோட்டம் மயானத்தின் எரிவாயு தகன இடம் பழுந்தடைந்துள்ளதால் இந்த அறிவிப்பை வவுனியா மாவட்டச் செயலாளர், மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களின் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
அதேவேளை வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தர்களை எரியூட்டும் ஒரேயொரு எரிவாயு மயானமாக காணப்பட்ட வவுனியா பூந்தோட்டம் மயானம் பழுதடைந்துள்ளமையினால் சடலங்கள் எரியூட்டப்படாமல் தேங்கும் நிலை காணப்படுவதாக வவுனியா நாகரசபை தலைவர் தேசபந்து இ. கௌதமன் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
வட மாகாணத்தில் கோவிட்-19 நோயாளிகளின் உயிரிழப்பு அதிகரித்த நிலையில் உள்ளது. வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் மாத்திரமே எரிவாயு மயானங்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கோவிட்-19 நோயினால் உயிரிழப்போரின் உடல்கள் வவுனியா மயானத்திலேயே எரியூட்டப்பட்டுகின்றன.
தற்போதைய நிலையில் அதிகளவான உயிரிழப்புகள் காரணமாக பூந்தோட்டம் மயானம் 24 மணித்தியாலங்களும் இயங்கும் மயானமாக செயற்பட்டு வருகின்றது. இதனால் நாம் பெரும் சவால்களையும் சிரமங்களையும் எதிர்கொள்கின்றோம். எனினும் எமது மக்களுக்கான சேவையை செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் உள்ளது.
எனினும் அதிகளவான சடலங்களால் பூந்தோட்டம் மயானத்தின் தன்மை மற்றும் வினைத்திறன் குறைந்து செல்கின்றது. நேற்று மாத்திரம் 11 சடலங்களை எரியூட்டியிருந்தோம். காலை 8 மணியில் இருந்து மறுநாள் அதிகாலை 4 மணிவரையும் சடலங்கள் எரிக்கப்பட்டன.
இதற்கும் மேலதிகமாக நேரப் பற்றாக்குறையினால் வவுனியா வைத்தியசாலையில் இன்னும் சடலங்கள் எரியூட்டப்படாமல் உள்ளன. பூந்தோட்டம் மயானம் இன்று காலை செயலிழந்துள்ளது. எனினும் இதனை மீள இயக்குவதற்கான முயற்சியை எடுத்து வருகின்றோம்.
அதனை பழுதுபார்க்க கூடியவர்கள் எவரும் வவுனியாவில் இன்மையால் கொழும்பில் இருந்தே வரவேண்டியுள்ளது.
ஒருநாள் எமது மயானம் இயங்காதுவிடும் பட்சத்தில் சடலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகின்றது. எனவே அரசு இவ்வாறான இடர் நிலைமையில் தங்களால் செய்யக்கூடிய உதவிகளை உடன் செய்யுமாறு வேண்டுகின்றோம் என்றார்.







No comments