கிளிநொச்சி வைத்திய சாலையில் கொரோனோ தொற்றினால் உயிரிழந்தவரின் சடலம் வைக்கப்பட்டு இருந்த பிரேத பெட்டியை உடைத்து அட்டகாசம் புரிந்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரி பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் நேற்றைய தினம் நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
கிளிநொச்சி பரந்தன் பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதனை அடுத்து சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக சடலம் "சீல்" பண்ணப்பட்டு மின் தகனத்திற்காக வவுனியாவுக்கு எடுத்து செல்லப்படவிருந்த நிலையில் , இறந்தவரின் உறவினர் ஒருவர் சடலம் வைக்கபப்ட்டு இருந்த இடத்திற்குள் அத்துமீறி நுழைந்து பிரேத பெட்டியை உடைத்து அட்டகாசம் புரிந்துள்ளார்.
அவரை அங்கிருந்த வைத்தியசாலை ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் அவ்விடத்தில் இருந்து அனுப்பி வைத்தனர். பின்னர் சடலம் மீண்டும் சீல் பண்ணப்பட்டு , பிறிதொரு பெட்டியில் வைத்து மின் தகனத்திற்காக வவுனியாவிற்கு எடுத்து செல்லப்பட்டது.
கொரோனோவால் உயிரிழந்தவரின் சடலம் சீல் பண்ணப்பட்ட நிலையில் அதனை உடைத்து அட்டகாசம் புரிந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதமை குறித்து பல தரப்பினரும் விசனம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அத்துமீறி செயற்படும் நபர்களால் கொரோனோ சமூகத்தில் பரவும் ஆபத்து உள்ளதாகவும் , அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்
அதேவேளை , கடந்த வாரமும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை வவுனியாவுக்கு மின் தகனத்திற்கு எடுத்து செல்லும் போது , இடையில் அவரது வீட்டில் சடலம் அஞ்சலிக்கு வைக்கப்பட்டதாகவும் , சடலத்திற்கு பலரும் அஞ்சலி செலுத்தியதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் அது தொடர்பில் சுகாதார பிரிவினர் மௌனம் காத்து வரும் நிலையில் ,தற்போது ஒருவர் சீல் பண்ணப்பட்ட பெட்டியை உடைத்து அட்டகாசம் புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
No comments