சிறைச்சாலைகளுக்குள் அவ்வாறு நடந்து கொள்ள நான் முட்டாள் அல்ல என கூறியுள்ள சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் முன்னாள் அமைச்சரும் , இரத்தினக்கல் மற்றும் ஆபரண கைத்தொழில் இராஜங்க அமைச்சருமான லொஹான் ரத்வத்தே , தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 12ஆம் திகதி அநுராதபுர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்குள் மதுபோதையில் , கைத்துப்பாக்கியுடன் தனது நண்பர்களுடன் சென்று கைதிகளை அச்சுறுத்தி இரு தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் முழங்காலிட வைத்தார் என குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டது.
அதனை அடுத்து எழுந்த சர்ச்சைகள் மற்றும் அழுத்தங்களால் அவர் தனது சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்தார். இருந்த போதிலும் தனது இரத்தினக்கல் மற்றும் ஆபரண கைத்தொழில் இராஜாங்க அமைச்சு பதவியை தொடர்ந்து வகித்து வருகிறார்.
அந்நிலையில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முதல் முதலாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
என் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுக்கிறேன். அவ்வாறு நடந்து கொள்ள நான் "முட்டாள் அல்ல" சிறைச்சாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு சோதணையிட கூடிய சிறப்பதிகாரம் எனக்கு உண்டு. அதன் அடிப்படையில் வழமையாக சோதனைக்காக செல்வது போன்றே அன்றைய தினமும் சென்று இருந்தேன்,
அநுராதபுர சிறைச்சாலைக்கோ , வெலிக்கடை சிறைச்சாலைக்கோ மது போதையிலையே , நண்பர்களுடையோ போகவில்லை. அங்கு நான் யாரையும் அச்சுறுத்தவும் இல்லை.
வெலிக்கடை சிறைச்சாலை தூக்கு மேடையையும் சோதனை நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே பார்வையிட்டேன். இந்த உண்மையை பிரதமர் , ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் உணர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
No comments