கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 2ஆம் திகதி (02.09.2021) அன்று உயிரிழந்த சுயாதீன ஊடகவியலாளர் ஞா.பிரகாஷின் 45ஆம் நாள் நினைவு நாள் இன்றாகும்.
பிரகாஷ் இறுதியாக ஊடகத்திற்கு எழுதிய கட்டுரை இதுவாகும். இக்கட்டுரை கடந்த வாரம் யாழில் இருந்து வெளிவரும் யாழ்.தினக்குரல் பத்திரிகையில் வெளியாகி இருந்தது.
அதனை பிரகாஸின் 45ஆம் நினைவு நாளான இன்றைய தினம் மீள் வெளியீடு செய்கிறோம்.
மனித வாழ்வில் எப்போதாே ஒருநாள் மரணம் நிச்சயம் என்பது இயற்கையின் விதி. இவ்வியற்கை விதியின் படி ஆயுள் முடிவதற்குள் ஒவ்வொரு மனிதனும் தத்தமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், தமது இலட்சிய கனவுகளை நிறைவேற்றியும் வாழ்ந்தனுபவித்து முடித்துவிடுகின்றனர். இவ்வாறு வாழ்பவர்களை இன்று கொடிய கொரோனா பெருந் தொற்று நோய் ஆட்டுவித்து வருகிறது. இந்த தொற்று நோயினால் இப்போதே மரணம் வந்து சேர்ந்துவிடுமோ என்ற பயம் தற்போது சமூகத்தில் பலரிடையிலும் காணப்படுகிறது.
இந்த கொரோனா பெருந் தொற்று நோய் காரணமாக பலரும் தமது கனவுகள் நோக்கி நகர முடியாமலும், எதிர்காலத்தில் செய்வோமெனத் திட்டமிட்டவற்றை எப்படி செயற்படுத்துவதென்றும் தெரியாமல் குழம்பிப்போயுள்ளனர். இன்னும்சிலர் மனவுளைச்சலுக்குள்ளாகி தற்கொலை செய்யும் நிலை வரை செல்கின்றனர். இவை உண்மையில் மனித வாழ்வின் மிக மோசமான பாதிப்புக்களாகும்.
இத்தகைய தொற்று நோய் இல்லாத காலத்தில் கூட மனிதர்கள் மரணப்பயம் இல்லாத போதிலும் தமது கனவுகளை நிறைவேற்றவும் மனவுளைச்சலில் இருந்து தப்பிக்கவும் போராடிக்கொண்டுதான் இருந்தனர். அந்த நிலையை கொரோனா தொற்றுக்கு பின்னரான மரணங்களுடனான வாழ்வு வெகுவாகப் பாதிப்படையச் செய்துள்ளதை தான் நாங்கள் காண்கின்றோம்.
திருமணங்கள், விழாக்கள், மாநாடுகள், போராட்டங்கள் எனப்பல நிகழ்வுகளை அச்சமின்றி நடத்துவது கேள்விக்குறியாக இருக்கின்றது. சுகாதார கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து ஆட்களை அதிகரிக்காமல் ஒன்லைன் வசதிகளை பயன்படுத்தி இவற்றை நடத்துவதற்கு கொரோனா தொற்று நிலைமை மக்களை கட்டாயப்படுத்தியிருக்கின்றது. அத்தோடு பாடசாலைகளை இயக்க முடியாத காரணத்தால் கல்வியும் ஒன்லைன் மயப்படுத்தப்பட்டிருக்கின்றது. இவற்றை போலவே இன்னும் பல துறைகளின் நிலைமைகளும் காணப்படுகின்றது.
ஒவ்வொருவருக்கும் எதிர்கால கனவுகள் இருக்கும். அது கல்வி, தொழில் முயற்சியாக இருக்கலாம் குடும்ப பொருளாதாரம், அடிப்படை வசதிகளை நிரப்பி கொள்வதாக இருக்கலாம் அல்லது நூல் வெளியீடு, கலையரங்கேற்றம் உட்பட அரங்குசார் நிகழ்வுகளாக இருக்கலாம். இவ்வாறு பல நோக்கங்கள், கனவுகளை செயற்படுத்த முடியாத தர்மசங்கடமான நிலையால் தடுமாற வேண்டியிருக்கின்றது.
எமது நாட்டின் கொரோனா தொற்று நிலைமை விரைவில் அடங்கிவிடும். இயல்புவாழ்வுக்குள் நுழையலாம் என்று எதிர்பார்த்து கண்கள் நீறுபூத்து ஈராண்டு நிறைவும் வரப்போகின்றதே தவிர நிலைமை இன்னும் மோசமாகிக் கொண்டே செல்கின்றது. சர்வதேச மருத்துவ ஆய்வாளர்களின் ஆய்வுகளின்படி கொரோனா தடுப்பூசிகளை சகலருக்கும் ஏற்றி முடித்த பின்னரே தொற்று நிலைமை குறைந்து கொரோனா நோய் அழியத் தொடங்கும் என்று சொல்லப்படுகின்றது. அதற்குள் எத்தனை ஆண்டுகள் கடந்தோடிவிடுமோ.
எழுத்தாக்கம்
மறைந்தும் வாழும்
ஞா.பிரகாஸ்






No comments