Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

"மாவீரன் கர்ணன்" எழுதியவர்களை விசாரணைக்கு உட்படுத்திய முல்லை பொலிஸார்!


தமது முச்சக்கர வண்டிக்கு பின்னால் "மாவீரன் கர்ணன்" என எழுதியிருந்த சகோதரர்கள் இருவரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்து கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ளனர். 

புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த தர்மராசா பிந்துசன் (வயது 21) மற்றும் தர்மராசா கனிஸ்ரன் (வயது 19) ஆகிய இருவரையுமே பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். 

"மாவீரன்" என எழுதப்பட்டமை தொடர்பிலையே விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , இது குறித்து மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்திற்கு உறவினர்கள் முறையிட்டதை தொடர்ந்து , மனிதவுரிமை ஆணைக்குழு அதிகாரிகள் அது தொடர்பில் தலையிட்டதை அடுத்து, போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை மற்றும் போக்குவரத்து பொலிஸாரின் கடமைக்கு ஒத்துழைக்காமை ஆகிய குற்றச்சாட்டுக்களை முன் வைத்து , அது தொடர்பிலையே விசாரணைக்காக பொலிஸ் நிலையம் அழைத்ததாக கூறி கடந்த 09 ஆம் திகதி கைது செய்யப்பட்டவர்களை நேற்று 10ஆம் திகதி பொலிஸ் பிணையில் விடுவிப்பதாக கூறி விடுவித்துள்ளனர்.

 
குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளரான இளைஞர் கருத்து தெரிவிக்கையில் ,

எனது முச்சக்கரவண்டியை என்னுடைய தம்பி கடந்த 09ஆம் திகதி வியாழக்கிழமை  முல்லைத்தீவு நகரத்துக்கு கொண்டுவந்த நிலையில் முல்லைத்தீவு பொலிஸார் அவரை வீதியில் இடைமறித்து, முச்சக்கர வண்டிக்கு பின்பக்கத்தில் ஒட்டபட்டிருந்த 'மாவீரன் கர்ணன்' என்ற ஸ்டீக்கர் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

வேறுவிதமாக அந்த ஸ்டீக்கரை சித்தரித்து அவரை கைது செய்யும் முயற்சியோடு அவரது சாரதி அனுமதி பத்திரத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறும் கூறி சாரதி அனுமதி பத்திரத்தை வாங்கி எடுத்துவிட்டு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு வருகைதருமாறும் கூறி விட்டு சென்றுள்ளனர்.

மாகாபாரதத்தில் வரும் பாத்திரமான கர்ணன் எமது சமயத்தின் வரலாற்று கதையை கூறும் வகையிலேயே அந்த பாத்திரத்தின்மீது நான் கொண்டுள்ள பற்றின் காரணமாக நான் அந்த பெயரை வடிவமைத்து எனது முச்சக்கரவண்டியில் ஒட்டியிருந்தேன்.

ஆனால் அந்த மாவீரன் என்ற வாசகத்துக்காகவே என்னை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு என்னை அழைத்திருந்தனர்.

எனது சகோதரன் முச்சக்கரவண்டியில் வீடு வந்து சேர முன்பே முச்சக்கரவண்டின் பின்னால் ஒட்டபட்டிருந்த எனது தொலைபேசி இலக்கத்துக்கு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திலிருந்து அழைத்த பொலிஸார் ,உங்களது முச்சக்கரவண்டியை ஓட்டி வந்தவரது சாரதி அனுமதி பத்திரம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் உள்ளது எனவே விசாரணை ஒன்றை மேற்கொள்ளவேண்டும் உடனடியாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு வாகன உரிமையாளரான நீங்கள் வரவேண்டும் என பொலிஸார் அழைத்தனர். 

அதற்கு அமைவாக நான் பொலிஸ் நிலையம் சென்ற நிலையில், ''மாவீரன் கர்ணன்'' என எழுதிய வாசகம் இன துவேசத்தை ஏற்படுத்தும் பயங்கரவாதத்தை தூண்டும் விடயம் என இராணுவத்தினரும் புலனாய்வாளர்களும் கண்காணித்தே உங்களது முச்சக்கரவண்டியை பிடித்துள்ளோம் என கூறிய பொலிஸ் அதிகாரி வாக்குமூலம் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  

சிவில் உடை தரித்த சில நபர்களையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து எனது அடையாள அட்டை பெயர் போன்ற விடயங்களை பதிந்தும் புகைப்படம் எடுத்தும் என்னிடம் விசாரணை மேற்கொண்டிருந்த வேளையில் எனது தம்பியையும் பொலிஸ் நிலையத்துக்கு வர கூறுமாறு அழைத்து அவரிடமும் இவ்வாறு நடந்துகொண்டிருந்தனர்.

இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினருக்கும் பிரதேச ஊடகவியலார்களுக்கும் உடனடியாக எமது குடும்பத்தினரால் தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து திடீரென வாக்குமூலம் பெறுவதை நிறுத்தி ஸ்டீக்கர் தொடர்பில் பின்வாங்கிய பொலிஸார் முச்சக்கரவண்டியை ஓட்டி வந்த எனது தம்பியை போக்குவரத்து பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் சந்தேகத்துக்கிடமாக நடந்து கொண்டமை ஆகிய குற்றசாட்டுகளை சுமத்தி நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் வரை கைது செய்து பொலிஸ் நிலைய சிறையில் அடைத்தனர்.

ஆனால் எனது சகோதரன் பொலிஸாரின் கடமைக்கு மதிப்புக்கொடுத்து சாரதி அனுமதி பத்திரத்தை கேட்கும்போது அவர்களிடம் கொடுத்துவிட்டு வாடகைக்கு ஏற்றிவந்தவர்களை உரிய இடத்தில இறக்கிவிட்டு மீண்டும் பொலிஸார் கூறியபடி பொலிஸ் நிலையத்துக்கு செல்வதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்.

மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணையை அடுத்தே உடனடியாக நடந்த விடயத்தை திசை திருப்பும் விதமாக எனது சகோதரன் மீது பொய்யான முறையில் வழக்கு பதிவு செய்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவரை கைது செய்தமைக்கான காரணத்தை வெளிப்படுத்தி கைதுக்கான பற்றுசீட்டை பெற்றுக்கொள்ள நான் பொலிஸ் நிலையம் சென்ற நிலையில் அவ்வாறு கைதுக்கான பற்றுசீட்டை வழங்கமுடியாது என பொலிஸார் தெரிவித்தனர். 

நான் தொடர்சியாக கைதுக்கான பற்றுசீட்டு எமக்கு வழங்கவேண்டும் என கேட்டு போலீசாரோடு வாதிட்ட பின்னரே சிங்கள மொழியில் எழுதிய பற்றுசீட்டை வழங்கினர். நான் எனது சொந்த மொழியில் வழங்குமாறு கோரியபோதும் அவர்கள் அவ்வாறு தரமுடியாது என கூறினர்.

இந்த நிலையில் எனது சகோதனை நேற்றைய தினம் (10) நீதிமன்றில் முற்படுத்துவதாக கூறிய பொலிஸார் பின்னர் காலை 11 மணிக்கு சிங்களமொழியில் எழுதிய தற்காலிக பொலிஸ் சாரதி அனுமதி பத்திர தடை துண்டை வழங்கி பொலிஸ் பிணையில் 3300 ரூபா தண்ட பணத்தை விதித்து விடுதலை செய்ததோடு எனது முச்சக்கரவண்டியின் பின்பகுதியில் ஒட்டபட்டிருந்த "மாவீரன் கர்ணன்" என்ற வாசகத்தையும் அகற்றுமாறு கூறினர்.

அவ்வாறு அகற்ற முடியாது என நான் கூறினேன் அவ்வாறு நான் அகற்றவேண்டுமாக இருந்தால் என்ன காரணத்துக்காக என குறிப்பிட்டு நீதிமன்றில் முற்படுத்துங்கள் என கூறி அகற்ற மறுத்த நிலையில் எனது முச்சக்கரவண்டியையும் விடுவித்தனர்.

ஆரம்பத்தில் மாவீரன் கர்ணன் என்ற வாசகத்துக்காக எம்மை பொலிஸ் நிலையம் அழைத்த போலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில் மனித உரிமை ஆணைக்குழுவில் நாங்கள் செய்த முறைப்பாட்டை தொடர்ந்தே விடயத்தை திசைதிருப்பும் வகையில் செயற்பட்டு இன்னும் இரண்டு மாதங்களில் உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் எனது தம்பியை கைது செய்து ஒருநாள் பொலிஸ் காவலில் வைத்து விடுதலை செய்ததோடு எனது சமயத்தின் சரித்திர வரலாற்றோடு தொடர்பு பட்ட மாவீரன் கர்ணன் என்ற வாசகத்தையும் அகற்றுமாறு வற்புறுத்தினர்.

மாவீரன் என்ற வாசகம் எனது மொழியில் உள்ள ஒரு சொல் அந்த சொல்லை எழுவதற்கு கூட எமக்கு சுதந்திரம் இல்லையா என்ற கேள்வியை பொலிஸாரின் இந்த செயற்பாடு கேட்க வைக்கின்றது.

கடந்த ஒருவருடங்களுக்கும் மேலாக நான் இந்த வாசகத்தை எனது முச்சக்கரவண்டியில் ஒட்டியுள்ளேன் , ஆனால் இந்த மாதத்தில் மாத்திரம் பொலிஸார் இந்த வாசகம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு இவ்வாறு நடந்துகொண்டமை எனக்கும் எனது சகோதரனுக்கும் மிகுந்த மன உழைச்சலை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.

 

No comments