Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கொவிட்-19 நெருக்கீட்டுக் காலப்பகுதியில், குடும்பப் பொறுப்புகளில் ஆண்- பெண் பாலினரின் பங்கெடுப்பும் அதன் ஆதிக்கமும்.


கொவிட்-19 நெருக்கீடானது நாம் மேற்கொண்டு வந்த நாளாந்த செயற்பாடுகளையும் வாழ்க்கை முறையினையும் வெகுவாக

மாற்றியமைத்துவிட்டிருக்கிறது. குறிப்பாக தனிமைப்படுத்தல் மற்றும் நாடு முடக்கல் நிலைமை அமுலுக்கு வந்ததிலிருந்து நமது இயங்குதல் பெரும்பாலும் வீட்டிற்குள்ளாகவே வரம்பிட்டுக் கொள்ளவேண்டிய புதிய சூழல் துவங்கியிருந்தது. வருமானம் ஈட்டும் தொழிற் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் தொழில்களில் ஈடுபடுவதற்கான
வாய்ப்பற்று தங்களின் வீடுகளின் எல்லைக்குள்ளாகவே அசைந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தினை கொவிட்-19 உம் அரசும் நிபந்தனையாக்கியது.


குறித்த சில தொழிற்துறைகளில் ஈடுபட்டிருந்தோருக்கு ‘வீடிலிருந்தவாறே வேலை’ புரிதல் பரீட்சயமாக்கப்பட்டன. பாடசாலை, பல்கலைக்கழகம், ஏனைய கல்வி நிலையங்கள் நிகழ்நிலை (ஒன்லைனின்) ஊடாக மாணவர்களையும் ஆசிரியர்களையும் அவரவர் வீட்டிலிருந்தவாறே கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதை சாதாரண நிலைமையாக்கிக் கொண்டன.

இத்தனை விபரிப்புகளும், நாம் வீட்டின் எல்லைக்குள் அசையும்
ஜீவன்களானோம் என்பதை ஒரு முறை சொல்லிவைப்பதற்காகத்தான்.

வீட்டிற்குள்ளாகவே வாழ்வென அமைந்ததைத் தொடர்ந்து வீட்டிற்கு வெளியே மேற்கொள்ள வேண்டியிருந்த குடும்பப் பொறுப்புகள் சுருங்கிவிட்டிருந்தன. வீட்டிற்கு வெளியே மேற்கொள்ளும் குடும்பப் பொறுப்புகள் என்பதனூடாக குடும்ப செலவுக்குத் தேவையான சம்பாத்தியத்தில் ஈடுபடுவதின்பால் உங்களின் கவனித்தலைக் கோருகிறோம்.

‘சம்பாத்தியம் புருச லட்ஷணம்’ எனும் வழக்காறு நமது கலாச்சாரத்தினுள் அதிகம் மேலோங்கியும் அதுவே ஆண்களை, ஏனைய வீட்டுக் குடும்பப் பொறுப்புகளிலிருந்து விலக்கினைப் பெற்றுக் கொள்வதற்கான பிரதான காரணிகளில் ஒன்றாக கலாச்சாரக் கதையாடல்கள் நிலைபேறடைந்திருக்கின்றன.

மற்றொரு புறத்தில் நம் கலாச்சாரமானது வீட்டுக்குடும்பப் பராமரிப்புப் பொறுப்புகளை பெண்களின் மீது கவிழ்த்திவிட்டிருக்கிறது. நம் கலாச்சாரம் புழக்கத்தில் வைத்திருக்கும் சில சொல்லாடல்களே பெண்களின் மீதான
பாரபட்சத்தினை வரையறை செய்துவைத்திருக்கிறது. அத்தகைய ஒரு சொல் தான் ‘மனைவி’. மனை என்றால் வீடு. மனைவி என்றால் வீட்டிற்குரியவள்; வீட்டிற்கு பொறுப்பானவள்; வீட்டைப் பராமரிப்பவள். 

பொது மனித செயற்பாடுகள் அல்லது பொது குடும்பப் பொறுப்புகள் எனப் பார்க்கப்பட வேண்டியவைகள் எல்லாம் ஆண்களின் பொறுப்புகள்: 

பெண்களின் பொறுப்புகள் எனப் பார்க்கப்படும் பாரபட்ச அவல நிலையினைத்தான் இங்கு கோடிட்டுக் காட்ட முனைகிறோம்.

கொவிட்-19 நெருக்கீடானது ஆண்களின் வெளிச் செயற்பாடுகளை வீட்டிற்கு வெளியேயான குடும்பப் பொறுப்புகளை தற்காலிகமாகத் துண்டித்து வீட்டிற்குள் அமர்த்தியிருந்தது. ஆக, வெளியில் சென்று சம்பாதிக்க வேண்டும் என சாட்டுச் சொல்லி ஏனைய வீட்டுக் குடும்பப் பொறுப்புகளிலிருந்து விலக்குப் பெறும் நியாயம் செல்லாக் காசாகிவிட்ட சூழலை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். இத்தகைய சூழலில், குடும்பப் பொறுப்புகளில் ஆண்- பெண்களின் பங்கேற்பு எப்படி இருந்திருக்கிறது; 

ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்திருகின்றனவா இல்லையா என்பதை அறிய வறுமை ஆராய்ச்சி நிலையமானது கடந்த வருடத்தில் தொலைபேசி மூலமான ஒரு கள ஆய்வினை மேற்கொண்டிருந்தது. அவ்வாய்வின் அடிப்படையில், குறிப்பான சில வீட்டுக்-குடும்பப் பொருப்புகளில் அதாவது, சமைத்தல், பாத்திரங்களைக் கழுவுதல், வீட்டினை சுத்தம் செய்தல், உடைகளைத் துவைத்தல், குளியலறையினை சுத்தம் செய்தல் போன்ற செயற்பாடுகளில் வீட்டிலுள்ள ஆண்களுடைய பங்களிப்பு குறிப்பிட்டளவு அதிகமாக இருத்திருப்பதனை . இந்தப் பிரதியானது, அவ்வாய்வு முடிவுகளை விபரிப்பதிலிருந்து விலகி,அவ்வாய்வின் தரவுகளிலிருந்து மற்றொரு பகுதியின் மீது கவனம்செலுத்துகிறது. 

அதாவது, அத்தரவுகளை இன்னொரு ஒழுங்கில் ஒப்புநோக்கும் பொழுது, வீட்டுக்-குடும்பப் பொறுப்புகளில் வீட்டின் ஆண் மற்றும் பெண்கள் பங்கேற்பு செய்வதில் தாக்கம் செலுத்தும் மூன்று காரணிகளை அவதானிக்க முடிந்தது.

1. தனிக்குடும்பம் மற்றும் கூட்டுக்குடும்பம்
2. திருமண நிலை
3. ஆண், பெண் குடும்ப பொருளாதார பங்கேற்பு

நமது தமிழ் கலாச்சாரம் ஆண்-மைய சிந்தனைகளை செறிவாகக்
கொண்டவைகள். நமது குடும்ப சமூக கட்டமைப்புகளும் ஆண்-மையசிந்தனைகளில் வடிவமைக்கப் பட்டவைகள் தான். அதனால்தான் குடும்பப் பொறுப்புகள் என்று வரும்பொழுது, குடும்பத்திற்காக பொருளீட்டல் (அல்லது உழைப்பில் ஈடுபடல்) என்பதைத் தாண்டி மற்றைய எந்தப் பொறுப்புகளையும் ஆண்களும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் எனும் அழுத்தத்தை நமது கலாச்சார உரையாடல்கள் (cultural discourse) கொண்டிருக்க வில்லை.

சமைத்தல், உடைகளைக் கழுவுதல், வீட்டை சுத்தம் செய்தல், குழந்தைகளைப் பராமரித்தல் போன்ற குடும்பத்தில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் ஆண்களாலும் மேற்கொள்ள முடியுமானவைகள் தான். ஆனால், அவைகள்
அனைத்தும் குடும்பத்திலுள்ள பெண்ணின் கட்டாய பொறுப்புகளாக நமது கலாச்சாரமும் சமூகமும் தொன்று தொட்டு வரும் பண்பாடு என வரையறை செய்திருக்கிறது. சற்று யோசித்துப் பார்த்தால், எமது சமூகத்தில் இந்தக் குடும்பப் பொறுப்புகளை பெண்கள் செய்ய வேண்டுமா? இல்லையா? என
கேள்வி எழுப்பப்படுவதில்லை. காரணம், அது கட்டாயம் பெண்கள்
மேற்கொள்ள வேண்டியவைகள் என்ற பொது ஏற்பு ஆழமாகப் வேரூண்றி இருக்கின்றது. அதனால் தான் மாற்றமுற்றிருக்கும் இன்றைய கொவிட் - 19 கால சூழலில் இத்தகைய குடும்பப் பொறுப்புகளை பெண்கள் செய்கிறார்களா? இல்லையா? என்பது ஆய்வுப் பொருளாக இருப்பதில்லை. இத்தகைய சூழலில் ஆண்களும் குடும்பப் பொறுப்புகளில் பங்கெடுக்கிறார்களா? இல்லையா? என்பது ஆர்வத்தைக் கோரும் ஆய்வுப் பொருளாக அமைகிறது.

இந்தக் குடும்பப் பொறுப்புகளை பெண்கள் மீது சாட்டி விட்டிருப்பதில் ஆண்- மைய கலாச்சார உரையாடல்களின் செல்வாக்கினை புரிந்து கொள்வது அவசியம். இருந்தும், இந்த விதிகளை இடைவினை செய்யும் விடயங்களாக மேலே முன்வைத்த மூன்று காரணிகளையும் அவதானிக்க முடிகிறது. 

அவை ஒவ்வொன்றும் தங்களின் இடைவினையினூடாக எப்படியான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன எனப் பார்ப்போம்.

தனிக்குடும்பம் மற்றும் கூட்டுக் குடும்பம் : ஆண்கள் மற்றும் பெண்களின் பங்களிப்பு பங்கேற்பு

நேர்முகம் காணப்பட்ட ஆண்களில், இத்தகைய காலகட்டத்தில் தாங்களும் சமையல் வேலைகளில் பங்கெடுப்பதாக கூறியவர்கள் அனைவருமே கருக்குடும்ப அமைப்பில் மனைவி குழந்தைகளுடன் வாழ்பவர்கள். 

கூட்டுக்குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் சமைத்தல் செயல்பாடில் ஈடுபடுவதனை பெற்றுக் கொண்ட தரவுகளில் அவதானிக்க முடியவில்லை. 

கூட்டுக் குடும்பத்தில் வாழும் திருமணம் முடித்த ஆண்கள் (அதாவது மாமனார், மாமியாருடன் / பெற்றோருடன் இணைந்து ஒரு வீட்டில் வாழ்பவர்கள்)சமைத்தல் செயல்பாடில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் குறைவுதான்.

ஒரு பெண் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய வீட்டுப் பொறுப்பாக சமூகக் கதையாடல்களால் (social discourse) கட்டமைக்கப்பட்டிருக்கும் பிரதான செயல்பாடு: சமைத்தல். ஆண்களும் கட்டாயம் சமைக்க கற்றிருக்க வேண்டும்
என எந்த ஒரு எதிர்பார்ப்பையும் கோருவதில்லை. அது பெண்களின் பொறுப்பு. இன்னும் சொல்வதானால், வீட்டில் சமைப்பது பெண்களின் பால்நிலை அடையாளத்தை (gender identity) வெளிப்படுத்தும் விடயங்களில் ஒன்றாகவே நமது சமூகக் கதையாடல்களில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் நமது கண்டாய்வுகளின் தகவல் படி இந்நிலை குடும்பங்களில் பெரிதும் மாற்றம் பெற்றிருக்கின்றது. பெரும்பாலும் ஆண்களும் குறைந்தது ஒரு வேலை உணவையெனும் சமைக்க முன்வந்துள்ளனர். 

தமது இணைந்து சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்குவது மட்டுமன்றி சமையல் செய்துமுள்ளனர்.

வீட்டில் ஒரு ஆண் சமைப்பதை இரு விதமான எதிர்மறை நிலையில் பார்க்கப்படுவதற்கு இட்டுச் செல்கிறது. ஒன்று: வீட்டில் சமைக்கும் ஆணை எழக்காரமாகப் பார்க்கும் போக்கு; மற்றயது, ‘இந்த வீட்டிலுள்ள பெண்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள்? எனும் பார்வை. 

இது ஒரு வீட்டில் ஆண் சமைப்பதனால் அக்குறித்த ஆண் மீதும் அவ்வீட்டிலுள்ள பெண்கள் மீதும் பிறரிடமிருந்து ஏழனப் பார்வை வரக்கூடும் எனும் எண்ணம் அவ்வீட்டில் உள்ளவர்களிடம் ஒரு வித அழுத்தத்தை உருவாக்கிவிடுகிறது. ஆனால் குடும்பம் என்ற கட்டமைப்புள் ஆண் பெண் என்ற வேறுபாடு இன்றி கணவன் மனைவி என்ற பொறுப்புணர்வு இந்த கொரோன காலகட்டத்தில் பலருக்கு வந்துள்ளது எனலாம்.

கூட்டுக் குடும்பத்தில் உள்ள மூத்த பெண்கள், ஆண்களை அடுக்களைக்குள் சமையலில் ஈடுபட அனுமதிப்பதில்லை. அவர்கள் வீட்டிலுள்ள பெண்களையே வலுக்காட்டாயமாக வீட்டு வேலைகளில் ஈடுபடுத்த முனைகிறார்கள். ஆனால், தனிக்குடும்பத்தில் ஒரு ஆண் சமையலில் ஈடுபடுவதை நீதி காண்பதற்கோ கணவனை சமைக்க விட்டுவிட்டு நீ என்ன செய்கிறாய் என அவனின் மனைவியிடம் கடிந்து கொள்ளவோ அல்லது அவளை சமைக்க வலுக்கட்டயப்படுத்தும் மூன்றாம் நபரின் பார்வை இங்கு இருப்பதில்லை. எனவேதான், தனிக்குடும்பத்தில் உள்ள ஆண்களினால் இந்த ஊரடங்கு சூழலில் சமையலில் பங்கேற்க முடிந்திருக்கிறது.

திருமண நிலை ஒருவர் திருமணம் முடிக்கின்ற பொழுது கணவன்/மனைவி எனும் புதிய ஒரு நிலையை அடைகிறார். அது அவர்களிடம் புதிய நடிபங்குகளைக் கோருகிறது. கணவன், குடும்ப செலவிற்காக உழைக்க வேண்டும்,

மனைவியை பாதுகாக்க வேண்டும். மனைவி, கணவனைப் பராமரிக்க வேண்டும், கணவன் உண்பதற்கு சமைத்துக் கொடுக்க வேண்டும், கணவன் உடுப்பதற்கு உடைகளை கழுவி இஸ்திரி செய்து கொடுக்க வேண்டும், ஏனைய வீட்டுப் பொறுப்புகளை செய்ய வேண்டும். அவர்களுக்கு குழந்தை கிடைத்ததும் தாய்/தந்தை ஆகின்றனர். அதுவும் புதிய நடிபங்குகளைக்
கோருகிறது. இந்த கணவன்/மனைவி எனும் குடும்பப் பொறுப்புகள் நமது ஆண்- மைய கலாச்சாரத்தின் உற்பத்திகள் என்பதை முன்பே அலசியிருந்தோம். இங்கு கோடிட்டுக் காட்ட விரும்பும் விடயம் என்னெவென்றால், திருமணமாகாத பெண்களுக்கு அத்தகைய நடிபங்குகளை
மேற்கொள்ள வேண்டிய தேவை அமைவதில்லை.

அடுத்து, குடும்பத்திலுள்ள மூத்தவர்கள், குடும்பப் பொறுப்புகளை ஒழுங்காக மேற்கொள்ள வேண்டும் எனும் வலியுறுத்தலை ஒரு குடும்பத்திலிருக்கும் திருமணமாகாத பெண்ணிடம் முன்வைப்பதை விட திருமணமான பெண்ணிடம் முன்வைப்பதனை அவதானிக்கலாம். 

அதற்கு காரணம் ,நடிபங்கு விடயம்தான். இதன் இடைவினையை இன்னும் விபரிக்க வேண்டுமானால், ஒரு வீட்டில் திருமணவயதை அடைந்துவிட்ட அல்லது திருமணத்திற்குத் தயாராகிவிட்ட பெண்ணிற்கு குடும்பப் பொறுப்புகளை ஒழுங்காக மேற்கொள்ள கற்றுக் கொடுப்பதனையும் அவதானிக்கலாம்.குடும்பத்திலுள்ள திருமணம் முடிக்காத ஆண்கள் சமையலில் சுறுசுறுப்பாக பங்கேற்றிருப்பதனை அவதானிக்க முடியவில்லை. 

ஆனால் திருமணம் முடிக்காத பெண்கள் சுறுசுறுப்பாக பங்கேற்றுகின்றார்கள். கூட்டுக் குடும்பத்திலுள்ள திருமணம் முடிக்காத பெண்களை விட திருமணம் முடித்த பெண்கள் அதிக வீட்டுப் பொறுப்புகளில் ஈடுபடுகிறார்கள்.

ஆண்,பெண் குடும்பப் பொருளாதார பங்கேற்பு வீட்டிலிருந்தே வேலைகளில் ஈடுபடும் (work from home) கருக்குடும்பத்தில் உள்ள ஆண்கள் சமையலிலோ அல்லது ஏனைய வீட்டுப் பொறுப்புகளிலோ பங்கேற்பதனை மிகவும் அரிதாகவே அவதானிக்க முடிகிறது.

கருக்குடும்பத்தில் உள்ள கணவன் மனைவி இருவருமே வீட்டிலிருந்தவாறே வேலைகளில் ஈடுபடுபவர்களாக இருக்கும் வீடுகளில் ஆண்களும் சமையல் மற்றும் ஏனைய குடும்பப் பொறுப்புகளில் பங்கேற்கிறார்கள். ஆனால், அது பெண்ணின் பங்கேற்பிற்கு சமானமானது அல்ல. 

இங்கு குடும்ப பொருளாதாரத்தில் பெண்களும் பங்கேற்பது அக்குடும்பத்தின் ஆணையும் குடும்பப் பொறுப்புகளில் பங்கேற்கச் செய்யும் இழுவைக் காரணியாக இயங்குவதை அவதானிக்க முடிகிறது.

கருக்குடும்பத்தில் உள்ள மனைவி மாத்திரம் வீட்டிலிருந்தவாறே
வேலைகளில் ஈடுபடுபவராக இருக்கும் பொழுது அக்கருக்குடும்பத்திலுள்ள ஆணும் பெண்ணும் கிட்டத்தட்ட சம அளவு வீட்டுப் பொறுப்புகளில் ஈடுபடுகிறார்கள். இங்கு பெண்ணின் குடும்பப் பொருளாதாரப் பங்கேற்பானது சற்று அதிகமான இழுவைக் காரணியாக தொழிற்படுகிறது.

ஊரடங்கு காலப்பகுதியில், கருக்குடும்பத்திலுள்ள ஆண்களே அதிகம் வீட்டு பொருட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறார்கள். கூட்டுக் குடும்பங்களிலும் ஆண்கள் கனிசமான அளவு தேவையான பொருட்களை
வாங்கி வருவதில் பங்கேற்றிருக்கிறார்கள்.

உடைகளைக் கழுவுவதில் கூட்டுக் குடும்பத்திலுள்ள திருமணமான
ஆண்களின் பங்களிப்பை அவதானிக்க முடியவில்லை. ஆனால் கூட்டுக் குடும்பத்தில் உள்ள திருமணமாகாத ஆண்களும் உடைகளைக் கழுவுவதில் (அவர்களின் உடைகளை மாத்திரம்) ஈடுபடுகிறார்கள். ஊரடங்கு நிலை இதில் எந்தவித மாற்றத்தையும் உண்டுபண்ணவில்லை. 

கருக்குடும்பத்திலுள்ள ஆண்கள் உடைகளைக் கழுவுவதில் ஒரளவு பங்கேற்ற்றிருக்கிறார்கள். (நீரை நிரப்புதல்/கொண்டுவருதல், கழுவிய ஆடையை காயப்போடுதல், உலர்ந்தவைகளை மடித்து வைத்தல் போன்ற செயற்பாடுகள்).

வீட்டு வேலை அல்லது குழந்தை பராமரிப்பு ஆகியவற்றில் கோவிட்-19 வெடித்ததன் விளைவுகளை தனித்தனியாக ஆராய்ந்தாலும், அதே சூழலில் ஆராய்ந்தாலும், இந்த நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதையும், குடும்பங்களின் பணி ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றது என்பதையும் எங்கள் முடிவுகள் காட்டுகின்றன. 

மேலும், இது ஆண்களையும் பெண்களையும் தனித்தனியாகக் காட்டிலும் தம்பதிகளை மையமாக பொறுப்புகளையும், குடும்பத்திற்குள் கடமைகளை எவ்வாறு ஒதுக்குவது குறித்த விடயமும் இவ்வாய்வில் திரட்டப்பட்டது. ஆண்களுக்கு மாறாக, தொலைத்தொடர்பு செய்யும் பெண்களுக்கும், அவசரநிலை காரணமாக வேலை செய்யாத பெண்களுக்கும் இடையே வீட்டு வேலை அதிகரிப்பதில் எந்த வித்தியாசமும் இல்லை. 

தங்கள் குடும்பத்துடன் ஒப்பிடுகையில், வேலை செய்யும் பெண்களுக்கு, வீட்டு வேலைகள் மற்றும் குழந்தை பராமரிப்புக்கு அதிக நேரம் தேவைப்படுகின்றன.  ஆண்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுகிறார்கள், எனவே வருமானம் ஈட்டுவதை விட மகிழ்ச்சியான குடும்ப வேலைகளில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். 

இவ்வாய்வின் கண்டாய்வுகள் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்புகளில் முக்கியமான தாக்கங்களைக் கொண்டுள்ளது எனலாம்.

சுஜாந்தி ஸ்ரீ சுரேஷ்குமார் மற்றும் இமாம் அத்னான்
ஆய்வு உத்தியோகத்தர்கள்
வறுமை ஆராய்ச்சி நிலையம்

No comments