Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கட்டுவான் - மயிலிட்டி வீதி புனரமைப்பு உடனடியாக நிறுத்தப்படவேண்டும்!


தனியார் காணிகள் ஊடாக அத்துமீறி பாதையை ஏற்படுத்த முடியாது. உண்மையான வீதியூடாக அதனை செய்ய வேண்டும். மக்கள் காணியூடாக வீதி அமைத்துவிட்டு வீதியை திறந்து விட்டேன் என பொய்யான பரப்புரை செய்து மக்களை ஏமாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென வலிவடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார் 

கட்டுவன் - மயிலிட்டி வீதிப்புனரமைப்பு தொடர்பாக இன்றைய தினம் ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
 
 மேலும் தெரிவிக்கையில், 
 
யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு செல்லும் கட்டுவன் - மயிலிட்டி வீதி விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக காணப்பட்டிருந்தது.
 
தற்போது திடீரென வீதி அபிவிருத்தி அதிகார சபை உள்ளூராட்சி மன்றத்துக்கோ பிரதேச செயலகத்திற்கோ எந்தவித அறிவிப்பையும் செய்யாமல் இராணுவத்தினரின் உதவியுடன் அத்துமீறி மக்களுடைய காணி ஊடாக வீதியை புனரமைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
 
இராணுவத்தினர் தனியார் காணி ஊடாக வீதியை புனரமைப்பதனால் 9 பொதுமக்களினுடைய ஏறத்தாழ 4 ஏக்கர் வரையான விவசாய நிலப்பகுதி துண்டாடப்படுகிறது. 
 
வலி.வடக்கில் 3000 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் 7000 மக்கள் மீளக்குடியமர வேண்டியிருக்கின்றது. இது ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்திற்கு மாறான செயற்பாடாகவே காணப்படுகின்றது.
 
இன்றைய வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் மக்களுடைய முறைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோது இந்த வீதி புனரமைப்பு உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
அத்துடன் பொதுமக்களின் காணிகளை எந்த காலத்திலும் துண்டாட இடமளிக்க முடியாது 
 
நேற்று ஊடகங்கள் வாயிலாக அங்கஜன் இராமநாதன், எங்களுடைய முயற்சியால் இந்த வீதி விடுவிக்கப்படுவதாக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இது பொய்யான செய்தி. தனியார் காணிகள் ஊடாக அத்துமீறி பாதையை ஏற்படுத்த முடியாது. உண்மையான வீதியூடாக அதனை செய்ய வேண்டும். மக்கள் காணியூடாக வீதி அமைத்துவிட்டு வீதியை திறந்து விட்டேன் என பொய்யான பரப்புரை செய்து மக்களை ஏமாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உடனடியாக அதை நிறுத்துவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் என்ற ரீதியில் அங்கஜன் இராமநாதன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 
அதேவேளை இதில் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், எமது ஒப்புதலின்றி சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளாமல் அரசும் அரச படையினரும் பலாத்காரமாக எமது காணியை கைப்பற்றியுள்ளனர்.
 
இந்நடவடிக்கைக்கு எதிராக வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கும் இதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளோம் என்றார்.

No comments