தையிட்டி சட்டவிரோத விகாரையில் புதிதாக மற்றுமொரு புத்தர் சிலையை நிறுவப்போவதாகவும் , அதற்காக முப்படைகள் மற்றும் பொலிசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டு, அதன் பிரதிகள் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஜனவரி மாதம் 03ஆம் திகதி "துருத்து போயா" தினத்தன்று தையிட்டி விகாரையில் , தெற்கில் இருந்து புகையிரதத்தில் எடுத்து வரப்படும் புத்தர் சிலையை , புகையிரத நிலையத்தில் இருந்து சமய அனுஷ்டனங்களுடன் , விகாரைக்கு எடுத்து சென்று , அங்கு நிறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அன்றைய தினம் புகையிரத நிலையத்தில் இருந்து , விகாரைக்கு புத்தர் சிலையை எடுத்து செல்லும் போது முப்படையினர் மற்றும் பொலிஸார் சமய ஊர்வலத்திற்கு உரிய பாதுகாப்புகளை வழங்க வேண்டும் என எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தையிட்டி விகாரை , தனியாரின் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. குறித்த விகாரைக்காக கையகப்படுத்திய காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு கோரி ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கு விகாரைக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜனவரி 03ஆம் திகதி புத்தர் சிலை நிறுவப்படவுள்ள பௌர்ணமி தினத்தன்றும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதேவேளை , தையிட்டி சட்ட விரோதமானது என்றும், விகாரை அமைந்துள்ள காணிகளில் எதிர்காலத்தில் எவ்வித கட்டுமான பணிகளையும் முன்னெடுக்க வேண்டாம் என வலி. வடக்கு பிரதேச சபையினால் விகாரதிபதிக்கு எழுத்து மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் " தையிட்டி விகாரை சட்டவிரோத கட்டுமானம்" என மும்மொழிகளில் விகாரைக்கு முன்பாக அறிவித்தல் பலகை நாட்டுவது என வலி. வடக்கு பிரதேச சபையில் கடந்த 18ஆம் திகதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது








No comments