காலத்துக்கு காலம் தமிழ் மக்களை காட்டி கொடுத்து வருகின்ற பொன்னம்பலம் குடும்பத்தினரின் பரவணிப் பண்பியல்பின் தொடர்ச்சியாகவே நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தற்போதைய இந்திய பயணமும் அமைந்துள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
"ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று அடையாளப்படுத்தி ஒரு தரப்பு இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு தமிழக முதல்வரையும், வேறு சில அரசியல் தலைவர்களையும் சந்தித்திருக்கின்றது.
தற்போதைய பிராந்திய அரசியல் சூழலில் இவர்கள் கேட்டுக் கொண்டது போல தமிழக அரசியல் தரப்புக்களி்ால் மத்திய அரசிற்கு ரு அழுத்தத்தினை கொடுக்க முடியுமா?
தற்போதைய பூகோள அரசியல் சூழலில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சார்ந்த விடயங்களில் மாற்றத்தினை ஏற்படுத்த முடியுமா என்பதெல்லாம் மிகவும் ஆழமாக பேசப்பட வேண்டிய விடயங்கள் என்பது ஒருபுறமிருக்க,
இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற 6 தலைவர்கள் வந்திருக்கின்றோம் என்ற பீடிகையுடன் சென்றிருக்கின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் வெளிப்படுத்திய விடயங்கள் தொடர்பாக எமது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டி இருக்கின்றது.
அண்மையில், தமிழக முதலமைச்சரை சந்தித்த பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினர், தமிழக கடற்றொழிலாளர்களுக்கும், இலங்கையின் வடக்கு தமிழ் கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் பாரிய பிரச்சினை இருப்பதாகவும் அதில் தமிழக முதலமைச்சர் தலையிட்டு சுமூகமாக தீர்த்து வைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால், இரண்டு தரப்பு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் பரஸ்பர முரண்பாடு இல்லை. இந்தியக் கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டிய சட்டவிரோத செயற்பாடுகளே பிரச்சினைக்கு மூலகாரணமாக இருக்கின்ற நிலையில், உண்மைகளை எடுத்துக்கூறி, எமது கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் வாழ்வாதார பிரச்சினையை தீர்க்க வேண்டியதன் அவசியத்தை தமிழக தலைவர்களிடம் வலியுறுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவறியுள்ளதுடன், பிரச்சினையின் தீவிரத்தையும் திட்டமிட்டு மறைத்து , திசைதிருப்பி இருக்கின்றனர்.
அதேபோன்று, தனி நாட்டை உருவாக்குவதே இறுதி இலக்கு என்று தமிழக முதல்வரிடம் தமிழ் தேசிய மக்கள் எடுத்துரைத்துள்ளமை விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் மூலம் வெளிப்படுத்தப்பட்டமையின் உள்நோக்கம் தொடர்பாக குறித்த கட்சியினர் மக்களுக்கு தெளிபடுத்த வேண்டும்.
அதிகாரங்களை கிடைத்தால் தனிநாட்டை உருவாக்கி விடுவார்கள் என்று 13 ஆம் திருத்தச் சட்டத்தை வழங்காமல் தவிர்ப்பதற்கே காரணம் சொல்லப்படும் நிலையில், நடைமுறை யதார்த்தம் பற்றிய சிந்தனையற்ற - முட்டாள்தனமான இந்தக் கருத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு பாதிப்பினையே ஏற்படுத்தும்.
தமிழகம் சென்றுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் வெளியிட்ட கருத்துக்களும் நிலைப்பாடுகளும் காலத்துக்கு காலம் தமிழ் மக்களை காட்டி கொடுத்து வருகின்ற பொன்னம்பலம் குடும்பத்தினரின் பரவணிப் பண்பியல் பின் தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டி இருக்கிறது,
ஈழத் தமிழர்களின் இருப்பையும் எதிர்காலத்தையும் கேள்விக்கு உட்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என மேலும் தெரிவித்தார்.







No comments