கோப்புப்படம்
விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் என அழைக்கப்பட்ட வேலாயுதம் தயாநிதிக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டாண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2006-ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட சட்ட விதிகளின் கீழ் குற்றம் புரிந்துள்ளார் என குற்றம் சுமத்தி தயா மாஸ்டருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது,
கடந்த 2009ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் 2009 மே 18ஆம் திகதிக்கு உள்பட்ட காலப்பகுதிக்குள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தளபதிகளான இளம்பரிதி மற்றும் திலக் ஆகியோருடன் இணைந்து அப்போது நடைபெற்ற போர் காலப் பகுதியில் புதுமாத்தளன் என்ற இடத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களிலிருந்து பொது மக்களை விடுவிக்காமல் தடுத்து, அவர்களை விடுதலைப் புலிகளின் தேவை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மனிதக் கேடயங்களாக்கியதன் மூலம் 2006ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க பயங்கரவாதம் மற்றும் குறித்துரைக்கப்பட்ட பயங்கரவாதச் செயற்பாடுகளைத் தடுத்தல் விதிகளின் கீழ் 7 (ஊ) ஒழுங்குவிதியுடன் சேர்த்து வாசிக்கப்படக் கூடிய 11ஆவது ஒழுங்குவிதியின் கீழ் தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றத்தைப் புரிந்துள்ளீர் என்ற குற்றச்சாட்டின் கீழ் தயா மாஸ்டருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் இன்றைய தினம் நடைபெற்ற நிலையில் , தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப்புலிகள் அமைப்புடன் இணைந்து பணியாற்றியமை மற்றும் விடுதலைப்புலிகளின் தளபதிகளுக்கு ஒத்தாசை வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு தயா மாஸ்டருக்கு 5 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
No comments