Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

இரட்டை மரண தண்டனை கைதியும் , நிமலராஜன் கொலை சந்தேகநபருமான நெப்போலியன் லண்டனில் கைது!


இரட்டை கொலை வழக்கில் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்ட கொலை குற்றவாளியும், ஊடகவியலாளர் ம. நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபருமான  நெப்போலியன் என்று அழைக்கப்படும் எஸ்.ரமேஸ் லண்டனில் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டு உள்ளதாக வெளிநாட்டு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் திகதி பாராளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது  ஊர்காவற்துறை நாரந்தனை எனும் இடத்தில் குழு ஒன்று வழி மறித்து துப்பாக்கியால் சுட்டும்,  வாளினால் வெட்டியும் , இரும்பு கம்பிகள் , பொல்லுகளாலும் தாக்குதல்கள் மேற்கொண்டது.அத் தாக்குதலில் யாழ்.பல்கலைகழக ஊழியர் ஏரம்பு பேரம்பலம் மற்றும்  ரெலோ அமைப்பின் ஆதரவாளரான யோகசிங்கம் கமல்ஸ்ரோன் ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். 

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களான மாவை சேனாதிராஜா , எம்.கே.சிவாஜிலிங்கம் , மற்றும் ரவிராஜ் உள்ளிட்ட 18 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர். 

குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் 2016ஆம் ஆண்டு டிசெம்பர் 7ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி ம. இளஞ்செழியன்  ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த நெப்போலியன் என்று அழைக்கப்படும் எஸ்.ரமேஸ் ,  மதன் என்று அழைக்கப்படும் நடராஜா  மதனராசா உள்ளிட்ட மூவரை குற்றவாளிகளாக கண்டு தீர்ப்பளித்தார். 

அதில் நெப்போலியன் மற்றும் மதன் என்போர்  இங்கிலாந்து நாட்டில் தலைமறைவாக இருந்தனர்.  

அதனால், எஸ். ரமேஸ் அல்லது நெப்போலியன், நடராஜா மதனராஜா அல்லது மதன் இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், வெளிவிவாகார அமைச்சு, நீதி அமைச்சு, சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் மா அதிபர் திணைக்களம் ஆகிய இணைந்து இந்தக் குற்றவாளிகள் இருவரையும் நாடு கடத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கட்டளை வழங்கியிருந்தது.

அதேவேளை, கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி இரவு 8 மணியளவில் ஊடகவியலாளர் மயில்வாகனம்  நிமலராஜன் வீட்டில் செய்தி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த படுகொலையின் பிரதான சந்தேகநபர் நெப்போலியன் என பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் இனம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். 

அதன் பின்னர் வழக்கு விசாரணைக்கு சமூகம் அளிக்காது தலைமறைவானார்.

இந்நிலையிலையே லண்டனில் வைத்து கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

அதேவேளை "யாழ்.மேல் நீதிமன்றினால் குற்றவாளிகள் என இனம் காணப்பட்டு இரட்டை மரண தண்டனை வழங்கப்பட்ட மூவரும் குற்றவாளிகள் அல்ல. அந்த தாக்குதல் சம்பவத்திற்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

குறித்த இரு நபர்களும் தற்போது வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் வெளிநாடுகளில் எமது கட்சியின் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்கள்.

அவர்களுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அவர்களை சர்வதேச பொலிசார் பிடித்தால் , பிடித்து இங்கே கொண்டு வரட்டும். 

தற்போது மேல் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து , மேல் முறையீடு செய்யபட்டு உள்ளது அதனால் மேற்கொண்டு அந்த வழக்கு தொடர்பில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி யாழில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கட்சியின் செயலாளரும் , தற்போதைய கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments