கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதவி விலக கூடாது என அலரி மாளிகைக்கு முன்பாக மஹிந்த ஆதரவு அணி போராட்டத்தில் இன்றைய தினம் காலை ஈடுபட்டது.
போராட்ட கும்பல் , வன்முறை கும்பலாக மாறி , அலரி மாளிகைக்கு முன்பாக மஹிந்தவை பதவி விலக கோரி அமைக்கப்பட்டு இருந்த "மைனா கோ கம" மீது தாக்குதலை மேற்கொண்டு , கூடாரங்களை அடித்து நொறுக்கி அவற்றுக்கு தீ வைத்தனர்.
அதன் போது , மஹிந்தவை பதவி விலக கோரி போராட்டம் நடாத்தி வந்தவர்கள் மீதும் , ஊடகவியலாளர்கள் மீதும் வன்முறைக் கும்பல் தாக்குதலை மேற்கொண்டது.
பின்னர் அங்கிருந்து காலி முகத்திடலில் , ஜனாதிபதியை பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் " கோட்டோ கோ கம" பகுதிக்கு சென்ற வன்முறையாளர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு , கூடாரங்களை அடித்து நொறுக்கி தீ வைத்தனர்.
வன்முறையாளர்களின் தாக்குதலுக்கு இலக்காகி பிரதமர் மற்றும் ஜனாதிபதியை பதவி விலக கோரி போராட்டங்களை முன்னெடுத்து வந்த 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டிகள் மூலம் வைத்திய சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
வன்முறையாளர்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் கொழும்பின் பல பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் தற்போது அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ளதுடன் நாடாளுமன்றம் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments