தலைமன்னார் கடற்கரைக்கு அண்மையாக உள்ள பற்றைப் பகுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 5 ஆடுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு மன்னார் மிருக வைத்தியசாலை அதிகாரிக்கு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவை இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டிருக்கலாம் என்று கடற்படையினரின் அறிக்கையின் அடிப்படையாக வைத்து பொலிஸார் முன்வைத்த சமர்ப்பணத்தை அடுத்தே மன்னார் நீதிமன்ற நீதிவான் எச்.ஏ.ஹிபதுல்லா, மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
கடந்த 3ஆம் திகதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் தலைமன்னார் பகுதியில் 5 நல்லின ஆடுகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் உள்ளதைக் கண்டுள்ளனர். அவற்றை மீட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
நான்கு கிடாய்களும் ஒரு மறியும் அடங்குகின்றன. அவை தொடர்பில் புலன்விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இன்று மன்னார் நீதிவான் நீதிமன்றில் அறிக்கையிட்டனர்.
அந்த ஆடுகள் தன்னுடையவை என ஒருவர் நீதிமன்றில் உரிமை கோரிய போதும் உரிய சான்றுகளை அவர் சமர்ப்பிக்கத் தவறியதால் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆடுகள் திருக்கேதீச்சர ஆட்டு மந்தையில் விட்டுப் பராமரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.