Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஜனாதிபதிக்கு 10 கோரிக்கைகள் அடங்கிய கடிதம் எழுதியுள்ள கடற்தொழில் அமைச்சர்


தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உட்பட காணிப் பிணக்குகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பிரதான பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் சர்வ கட்சி அரசொன்றிற்கான பொது வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வகட்சி அரசொன்றை அமைப்பதற்கான பொது சேலைத்திட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பங்களிப்பை கோரிக்கையாக விடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அனுப்பியுள்ள கடிதத்திற்கு பதிலளித்து, தமிழ் மக்களின் சார்பில் பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து எழுதிய பதில் கடிதத்திலேயே மேற்கண்டவாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"நாட்டில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கும், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்க்கவுமான சவாலான பணியை முன்னெடுக்க அனைத்து அரசியல் கட்சிகள், நிபுணர்கள், சிவில் சமூகங்கள் போன்றவற்றின் பங்கேற்புடன் ஒரு பொது வேலைத்திட்டத்தை செயல்படுத்தும் தங்களின் கடுமையான முயற்சியை பாராட்டுகிறேன்.

எனது கட்சியான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியாகிய நாம், 19ஆவது திருத்தம் மற்றும் பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவை மீள அறிமுகப்படுத்துவதற்கும் மேலதிகமாக ஒரு பரந்த உரையாடலுக்காக முயற்சிப்பதையிட்டு எமது பாராட்டுக்களை தெரிவிப்பதுடன் பின்வரும் 10 அம்சக் கோரிக்கைகளையும் உங்கள் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்கொள்ளுமாறு முன்மொழிகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் முன்மொழியப்பட்டுள்ள பத்து அம்சக் கோரிக்கைகள்.

1. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான சட்டமியற்றுதல்.
2. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் அரசியலமைப்பு விதிகளை முழுமையாக அமுல்படுத்துவதை மேற்பார்வையிடும் ஒரு குழுவை அமைப்பது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதை உறுதி செய்வதற்குத் தேவையான நிர்வாக மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளை இந்தக் குழு பரிந்துரைக்க வேண்டும்.
3. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்லது குற்றம் சாட்டப்பட்டு நீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல்.
4. வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவித்தல்.
5. வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புகள், சாகுபடி செய்யக்கூடிய, மீன்வளர்ப்பு விவசாயத்திற்குப் பயன்படுத்தக்கூடிய மற்றும் மேய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் நிலங்களை வன காப்பகங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக நாடளாவிய ரீதியில் பல புகார்கள் உள்ளன. இது வடக்கில் பயிர்ச்செய்கையையும், நன்னீர் மீன்வளர்ப்பையும் தடுத்து சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே இவ்விவகாரங்கள் தொடர்பாக 2012 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வர்த்தமானிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
6. தொல்லியல் திணைக்களம், தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் விதிகளின்படி, தொல்பொருள் நினைவுச் சின்னங்களாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படாமல், வடக்கு மற்றும் கிழக்கில் தொல்லியல் பெறுமதிமிக்க இடங்களாக ஒதுக்கியுள்ளதாக பல முறைப்பாடுகள் உள்ளன. தொல்பொருள் இடங்களாக முறையாக அறிவிக்கப்படாத போதிலும், அந்த இடங்களுக்குள் மக்கள் நுழைவதை திணைக்களம் தடுக்கிறது.
தொல்லியல் மற்றும் தொல்பொருள் இடங்களின் நினைவுச்சின்னங்களை அடையாளம் காணும் திணைக்கள அதிகாரிகளின் எந்தவொரு முயற்சியிலும் வடக்கு மற்றும் கிழக்கில் தொல்பொருள் மதிப்புமிக்க இடங்களாக வர்த்தமானியில் வெளியிடுவதற்கு முன்னர், அப்பகுதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அதிகாரிகள் இடம்பெறுவதுடன், குறிப்பாக தொடர்புடைய இனக்குழுக்களின் ஆலோசனையையும் பெற வேண்டும்.
7. பாதுகாப்புப் படைகள் மற்றும் பொலிஸ் சேவை ஆகியவற்றில் நாட்டின் இன விகிதாசாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை உறுதி செய்வதற்கான திட்டத்தை உருவாக்குதல்.
8. அரச விழாக்களில் இரு மொழிகளிலும் (சிங்களம் மற்றும் தமிழ்) தேசிய கீதத்தைப் பாடுவது.
9. தனிநபர்கள், புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் மீதான தடையை நீக்குதல்.
10. 18 வயதை அடைந்த பின்னர் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் வசிப்பவர்கள் மற்றும் வேலைக்காக வெளிநாட்டில் இருப்பவர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருதல்.

போன்ற கோரிக்கைகளை முன்மொழிந்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதானது உங்களது பொது வேலைத்திட்ட முயற்சிக்கு மேலும் வலுச் சேர்ப்பதாகவும் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments