மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை திருடும் போது போதிய வெளிச்சம் இல்லை என தீக்குச்சியை பற்ற வைத்த போது மோட்டார் சைக்கிள் தீ பிடித்தமையால் , பெட்ரோல் திருடிய சிறுவன் மாட்டிக்கொண்டுள்ளான்.
விசுவமடு வள்ளுவர்புரம் பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் நள்ளிரவு நேரம் புகுந்த சிறுவன் வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருந்து பெட்ரோலை போத்தலில் திருடியுள்ளான். பின்னர் அங்கிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பெட்ரோலை திருட முற்பட்ட வேளை , போதிய வெளிச்சம் இல்லாததால் , தீக்குச்சியை பற்ற வைத்து வெளிச்சம் பெற முயன்றுள்ளான்.
அவ்வேளை பெட்ரோல் சடுதியாக தீ பிடித்து மோட்டார் சைக்கிள் மீதிலும் தீ பற்றிக்கொண்டது.
அதனை அடுத்து வீட்டார் சத்தம் கேட்டு , கண் முழித்த போது மோட்டார் சைக்கிள் எரிவதனை கண்டு , கூக்குரல் எழுப்பவே அயலவர்கள் கூடியுள்ளனர். அனைவருமாக மோட்டார் சைக்கிளில் பற்றிய தீயினை அணைத்துள்ளனர். இருந்த போதிலும் மோட்டார் சைக்கிள் பகுதிகளவில் எரிந்து நாசமாகியுள்ளது.
அதனை தொடர்ந்து வீட்டார் அயலவர்கள் இணைந்து அப்பகுதியில் தேடுதல் நடாத்திய வேளை வீட்டிற்கு அருகில் உள்ள பற்றைக்குள் பயத்தில் நடுங்கியவாறு மறைந்திருந்த சிறுவனை பிடித்துள்ளனர்.
சிறுவன் அப்பகுதியில் கடந்த காலங்களில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவன் என அயலவர்கள் கூறி சிறுவனை புதுக்குடியிருப்பு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.