Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

குறியீடுகளைக் கொண்டு எண்ணங்களை வெளிக்கொண்டு வந்ததில் வல்வராக இருந்த அஸ்வின் - சி.வி


வடமாகாண முதலமைச்சராக நான் இருந்த கால பகுதியில்  திருநீற்றுக் குறிகள், ஒரு குங்குமப் பொட்டு, வெள்ளைத் தாடி, கண்ணாடி போன்றவற்றைக் கீறி அதன் மேல் வேட்டி சால்வையைப் போர்த்தி வரைந்த வரைவு தான் என்னுடைய குறியீடாக அமைந்து விட்டது என வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 

கருத்தோவியர் அஸ்வினின் நினைவேந்தலும் புலமைப் பரிசில் வழங்கல் நிகழ்வும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்றது. 

அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 

அஸ்வினின் நினைவேந்தலுக்கு என்னை அழைக்கும் போது நான் கொழும்பில் இருந்தேன். சாவகாசமாக வர வேண்டியவன் இது கேட்டு சற்று நேரத்துடனேயே வந்து விட்டேன். 

காரணம் அஸ்வினின் கோடுகளால் வரையப்பட நான் அதிர்ஷ்டம் பெற்றிருந்தவன். நான் முதலமைச்சராக இருந்த போது என்னைப் பற்றித் தன் கோடுகளால் பல முறை பேசியிருந்தார். என்னைப் பற்றிக் கோடுகளால் பேசியவரை சில வார்த்தைகளால் தானும் அவர் பற்றிப் பேசாது இருந்தேனானால் நான் நன்றி மறந்தவன் ஆகிவிடுவேன்.
 
இளவயதில் திரு.அஸ்வின் அவர்களைத் தமிழ்த் தாய் இழந்தமை இலங்கைத் தமிழ் ஊடகப் பரப்பில் ஈடு செய்ய முடியாதொரு பெரும் இழப்பு என்றால் அது மிகையாகாது. 

அவர் நகைச்சுவைச் சித்திர விற்பன்னராக இருந்து வந்த அதே வேளையில் குறும்பட இயக்குநராகவும் பத்திரிகையாளராகவும் வலம் வந்தவர். 2011ம் ஆண்டில் “கண்ணே என் கண்ணே” என்ற குறும் படத்தை தமது 31வது வயதில் இயக்கி வெளியிட்டு AAA மூவீஸின் விருதையும் தட்டிக் கொண்டார். 

சமூகத்தின் அன்றாடப் பிரச்சினைகள், அரசியல் நடைமுறைகளை நகைச்சுவையாகவும் கருத்தாழம் மிக்கதாகவும் எழுதி “கேட்டேளே சங்கதி” என்ற பத்தி எழுத்திற்காக இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தினால் 2011ம் ஆண்டு அவருக்கு சிறந்த பத்தி எழுத்துக்கான அதியுயர் விருதும் (Best Column Writer) கிடைத்தது. 

இலங்கைச் சினிமாவை வளர்ச்சிப் பாதையில் நகர்த்த வேண்டும் என்றும் அவர் இங்குள்ள கலைஞர்களுக்கு அங்கீகாரங்கள் கிடைக்க வேண்டும் என்றும் அவாக் கொண்டிருந்தார். ஆனால் தமது 36வது வயதில் திடீரென்று மாரடைப்பால் இறைவனடி சேர்ந்து விட்டார்.

ஒரு சிறந்த நகைச்சுவைச் சித்திரவியலாளர் 5 விடயங்களைப் பொதுவாகப் பாவிப்பார். அவையாவன –

குறியீடுகள் (Symbols)
தலையங்கங்களும் விளக்க அடையாளங்களும் (Captions and Labels)
ஒப்புவமை (Analogy)
வஞ்சப் புகழ்ச்சி (Irony)
மிகைப்படுத்தல் (Exaggerate)

இவையொவ்வொன்றையும் பரிசீலித்தோமானால் குறியீடுகள் என்று கூறும் போது புறாக்களைச் சமாதானத்துக்கு குறிப்பிடுவது போன்று கண்மூடிய பெண் ஒருவர் திராசுகளை நிறுக்கும் படத்தினைக் காட்டி நீதி என்பதற்கு அதனை குறியீடாகப் பாவிப்பது போல் குறியீட்டின் மூலமாக கூறவந்ததை இலகுவாக எடுத்தியம்புதல் குறியீடுகள் வாயிலான எடுத்துக்காட்டு.
 
அஸ்வின் அவர்கள், திருநீற்றுக் குறிகள், ஒரு குங்குமப் பொட்டு, வெள்ளைத் தாடி, கண்ணாடி போன்றவற்றைக் கீறி அதன் மேல் வேட்டி சால்வையைப் போர்த்தி வரைந்த வரைவு தான் என்னுடைய குறியீடாக அமைந்து விட்டது.
 
ஒரு முறை முதலமைச்சரான என்னை சுதந்திரமாக நகர விடாமல் என் கட்சி நடந்து கொண்டதை பின்வருவமாறு நகைச்சுவைச் சித்திரத்தில் வரைந்தார் 

- ஒரு மாடு ஓட எத்தனிக்கிறது. வாலைப் பிடித்து ஒருவர் அதனை நிறுத்தப் பார்க்கிறார். சிலர் ஜல்லிக்கட்டு மாட்டை நிறுத்த எத்தனிப்பது போல் அந்த மாட்டின் மீது தாவிப் பிடித்து நிறுத்தப் பார்க்கின்றார்கள். பின்னால் நின்று ஒருவர் “அடக்கு”,  “அமுக்கு” என்று அலறுகின்றார்! ஆனால் மாடோ முன்னேறிச் செல்கின்றது. இதில் மாடு நான், வாலைப் பிடித்தவர் நண்பர் மாவை, “அடக்கு”, “அமுக்கு” என்று அலறியவர் சம்பந்தன் ஐயா மற்றும் மாட்டின் மீது தாவி ஏறி நிறுத்தப்பார்த்தவர்கள் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள்!
 
மாட்டை என் போன்று சித்திரிக்க மாட்டின் நெற்றியில் திருநீற்றுப் பட்டை, கண்ணாடி, சிவத்த குங்குமப் பொட்டு வரையப்பட்டிருந்தன. தாடி இல்லை! எனது முக்கியமான குறியீடாக மாட்டின் கழுத்தைச் சுற்றி பச்சை வெள்ளை சிவப்பு நிறம் கொண்ட சால்வை பறப்பதை வரைந்து காட்டுகின்றார்.

 

அஸ்வின்! குறியீடுகளைக் கொண்டு தமது எண்ணங்களை வெளிக்கொண்டு வந்ததில் வல்வராக இருந்தார் திரு.அஸ்வின் அவர்கள்.
 
எனவே தான் குறியீடுகளைக் கொண்டு அரசியல் நிகழ்வுகளைச் சித்திரிப்பது நகைச்சுவைச் சித்திரக்காரர்களின் ஒரு பெரிய வழிமுறை என்று கூற வருகின்றேன்.
 
அடுத்தது விளக்க அடையாளங்கள். என் சம்பந்தமான மேற்கொண்ட நகைச்சுவைச் சித்திரத்தில் சம்பந்தன் ஐயா பின்னால் நின்று “அடக்கு”, “அமுக்கு” என்று அலருவது தான் நகைச்சுவைச் சித்திரத்தின் உட் கருத்தை வெளியிடும் வாசகங்களாக அமைந்தன.
 
மூன்றாவது ஒப்புவமை. என் கேலிச் சித்திரத்தில் கட்சியுடன் முரண்டு பிடித்து அரசியல் செய்த எனது நடவடிக்கைகளை திமிர் கொண்ட மாடானது தத்ரூபமாக வெளிக் கொண்டுவர உதவியது.

நான்காவது வஞ்சப் புகழ்ச்சி ஆகும். நேர் எதிர் பொருள் கொடுக்கும் சொற்றொடரே வஞ்சப் புகழ்ச்சி ஆகும். ஒரு ஜல்லிக் கட்டு மாட்டை நிறுத்துவதே போட்டியில் பங்கேற்கும் பங்குபற்றாளரின் வெற்றியாகும். என்னுடைய மேற்கண்ட கேலிச்சித்திரத்தில் மாட்டை நிறுத்தும் அவர்களின் வீரச் செயல், முதலமைச்சரின் செயற்பாடுகளை நிறுத்த அவரின் கட்சியால் செய்யப்பட்ட சதி என்ற கருத்தை மாட்டை வைத்து வெளியிடுகின்றார் சித்திரக்காரர் அஸ்வின். 

அதாவது கட்சியின் வீரச் செயல் உண்மையில் சதியே என்பதை வஞ்சப் புகழ்ச்சி ஊடாக வெளிக்கொண்டு வந்தார்.

ஐந்தாவது மிகைப்படுத்தல். மிகைப்படுத்தல் என்பது ஒரு நகைச்சுவைச் சித்திரக்காரரின் குணவியல்பாகும். நண்பர் மாவை அவர்கள் மாட்டின் வாலைப் பிடித்து நிறுத்த பிரயத்தனங்கள் செய்தமை மாவையின் மனோநிலையை வெளிப்படுத்த மிகைப்படுத்திப் பாவிக்கப்பட்டிருந்தது.
 
ஆகவே சிறந்த ஒரு நகைச்சுவைச் சித்திரக்காரரின் குணவியல்புகளை திரு அஸ்வின் அவர்கள் தமது வாழ்க்கையில் எடுத்துக் காட்டினார். 

அப்படி இருந்தும் சற்றும் ஆணவம் அல்லது அகந்தை இன்றியே தனது செவ்வியை அந்தக்காலத்தில் வழங்கியிருந்தமை அவரின் அப்போதைய ஓடியோ கசட்டின் வாயிலாக வெளிவருகின்றது. அதனை எனக்கு அனுப்பிய அவரின் சகோதரருக்கு எனது நன்றிகள் உரித்தாகுக!
 
இறைமையே எம்மை வழிநடத்துகின்றது என்பதை அறியாதவன் அகந்தைக்கும் ஆணவத்திற்கும் அடிமையாகின்றான்.

  அப்பேர்ப்பட்டவர்கள் தான் தோல்விகளைக் கண்டு மிரண்டு போகின்றவர்கள். தோல்விகளை இறைவன் கற்றுக் கொடுக்கும் பாடங்களாக ஏற்றுக் கொள்வதே உயர்ந்த மனிதர்களின் பண்புகள். அந்த விதத்தில் அஸ்வின் சுதர்சன் மக்களுள் ஒரு உயர்ந்த மனிதனாக வைத்து புகழப்பட வேண்டியவர்.
 
அவர் நினைவாக பல்கலைக்கழக ஊடகக் கற்கை மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்குவது சாலச் சிறந்தது. வரவேற்பிற்குரியது.
 
நகைச்சுவைச் சித்திரம் வரைபவர்கள், வரையத் தெரிந்தவர்களாக இருக்கும் அதே நேரத்தில் தம்மைச் சுற்றி நடப்பவைகளை சுவையுடன் அதுவும் நகைச் சுவையுடன் அவதானிக்கத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
 
ஆகவே சரித்திரம், சமூகவியல், நாளாந்த சம்பவங்கள் பற்றிய அறிவு போன்றவை நகைச்சுவைச் சித்திரக்காரர்களுக்கு மிகவும் முக்கியமான அறிவுச் சாதனங்கள். அதுமட்டுமல்ல. தம்மைப் பார்த்துச் சிரிக்கத் தெரியாத அரசியல்வாதிகளையோ அதிகாரம் உள்ளவர்களையோ சித்திரிக்கும் போது கவனமுடன் நடந்து கொள்ளத் தெரிய வேண்டும். 

ஆனால் உண்மை நிலையை விட்டுப் பிறழ்ந்து விடவும் கூடாது. எனவே நகைச்சுவைச் சித்திர விற்பன்னர்கள் வீரம், தீரம், விவேகம், ஆக்கத்திறன், அன்பு போன்ற பல திறன்களையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். 

அன்பு என்றால் சுற்றியுள்ள மக்கள் மீது அன்பும் கரிசனையும் உள்ளவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். அவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் மனோநிலையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.  ஆங்கிலத்தில் Sympathy, Empathy என்று இரு சொற்கள் உள்ளன.  Sympathy  என்று கூறும் போது மற்றவர்கள் மீது நாம் பச்சாத்தாபப்படுவது. Empathy என்பது மற்றவர்களின் சுக துக்கங்களை எம்முள் உள்வாங்கி அதற்கான காரியங்களில் இறங்குவதாகும். 

நகைச்சுவைச் சித்திரக் கலைஞர்கள் இந்த Empathy நிலையில் இருந்து உலகை நோக்கிச் செயலாற்ற வேண்டும்.

இத்தருணத்தில் புலமைப்பரிசில் பெறும் ஊடக கற்கை மாணவ மாணவியர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை இப்பொழுதே கூறிவிடுகின்றேன் என்றார்.


அஸ்வின் வரைந்த கருத்தோவியங்கள் சில ...


















No comments