Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பொங்கலுக்கு முன்பு இணக்கத்தை எட்டி, சுதந்திர தினத்திற்கு முன் தீர்வாம்


தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான தீர்மானங்களை வரும் தைப்பொங்கல் தினத்துக்கு முன்னர் இறுதி செய்து கொள்வது எனத் தமிழர் தரப்புக்கும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்க தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக வரும் 10,11,12,13 ஆம் திகதிகளில் தொடர்ந்து நான்கு நாட்கள் பேச்சுக்களை நடத்தித் தீர்வுக்கானத் தீர்மானங்களை எட்டுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை மாலை 6:15 முதல் 7 மணி வரை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இது தொடர்பான கூட்டத்தில் அரச தரப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ச, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

தமிழர் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பதினான்கு கைதிகள் குற்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் உள்ளனர். எஞ்சியோர் வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

தண்டனை தீர்ப்பு பெற்ற 14 பேரில் ஐவரை உடனடியாக மன்னிப்பின் கீழ் விடுவிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஏனைய ஒன்பது பேருடைய விடயங்களிலும் சில நடைமுறை ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு, அவர்களும் பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.

வழக்குகளை எதிர்கொண்டுள்ள அரசியல் கைதிகள் விடயத்தில் நீதிமன்றம் மூலம் அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இதன்போது தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதிக்கும் இராணுவ தரப்புக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுக்களை அடுத்து கணிசமான காணிகளை விடுவிப்பதற்கான இராணுவத் தரப்பினால்  இணக்கம் காணப்பட்டுள்ளது.

எனினும், வரும் 3 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் இது சம்பந்தமான அனுமதி பெறப்பட்டு, வரும் 5 ஆம் திகதி மீண்டும் தமிழர் தரப்பும் அரசு தரப்பும் பேசும் போது அது பற்றிய நிலைமை தெளிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அரசமைப்பில் உள்ள அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மற்றும் தீர்வுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் 10,11,12,13 ஆம் திகதிகளில் தொடர்ந்து நான்கு நாள்கள் கூடிப் பேசித் தீர்மானங்களை எடுப்பது என்றும் நேற்று முடிவு செய்யப்பட்டது.

இந்த நான்கு நாள்களிலும் பேசப்பட வேண்டிய விடயங்களின் நிகழ்ச்சி நிரல் குறித்து, வரும் 5 ஆம் திகதி மீண்டும் கூடும் போது கலந்தாலோசித்து இறுதி செய்வது என்றும் நேற்று தீர்மானிக்கப்பட்டது.

13 ஆவது திருத்தத்தில் கூறப்பட்ட அதிகாரப் பகிர்வு விடயங்களை முழு அளவில் நடைமுறைப்படுத்துவதற்கு, அதற்குப் பின்னர் கொண்டுவரப்பட்ட எந்தெந்த சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பில் விவரமான பட்டியல் ஒன்றை அரச தரப்பிடம் சுமந்திரன் எம்.பி. கையளித்தார்.

வரும் 5 ஆம் திகதி கூடி, நான்கு நாள் கூட்டத்துக்கான  நிகழ்ச்சி நிரல் ஒழுங்குபடுத்தும் போது, இந்த விடயமும் அதற்குள் சேர்த்துக் கொள்ளப்படும் எனக் கூறப்பட்டது.

தீர்வுக்கான விடயங்கள் குறித்து பேசுவது ஒரு புறம் இருக்க 13 ஆவது திருத்தத்தில் உள்ள காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் ஆகியவற்றை முழு அளவில் நடைமுறைப்படுத்துவதற்கான முடிவு உடனடியாக எட்டப்பட வேண்டும் என்ற சம்பந்தனின் வலியுறுத்தல் நேற்றைய கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அறியவந்தது.

இறுதித் தீர்வுக்கான உடன்பாடுகளை தைப்பொங்கலுக்கு முன்னர் எட்டினால், அதை ஒட்டிய சில விடயங்கள் தவறப்பட்டிருந்தாலும் அவற்றை வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் இறுதி செய்து, நாட்டின் 75 ஆவது சுதந்திர தின சமயத்தில் தீர்வுக்கான இறுதி முடிவுகள் முழுமையாக எட்டப்பட்டிருக்கும் என்று நேற்றைய கூட்டத்தில் நம்பிக்கை வெளியிடப்பட்டது.

No comments