Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வடக்கில் குளங்கள் அரைப்பகுதி கூட நிரம்பவில்லை; மழை வேண்டி பிரார்த்திப்போம்!


வடகீழ் பருவக்காற்றுடன் வங்காள விரிகுடாவில் கீழைக் காற்றுக்களும் இணைந்திருப்பதன் காரணமாக எதிர்வரும் 4ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது பரவலாக மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்.பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்.நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்,

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று எதிர்வரும் 5ஆம் திகதி  உருவாகும் வாய்ப்புள்ளது. எனவே 4ஆம் திகதி வரையில் மிதமான மழை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

இவ்வாண்டு இதுவரை 04 தாழமுக்கங்கள் வங்காள விரிகுடாவில் உருவாகின. எனினும் ஒரு தாழமுக்கம் மட்டுமே எமக்கு மழையைத் தந்துள்ளது. இரண்டு தாழமுக்கங்கள் அவைக்கு அண்மையில் தோன்றிய உயரமுக்க நிலைமைகளால் தமது ஈரப்பதன் கொள்ளளவை இழந்து வரண்ட காற்றாகவே வீசின. ஒரு தாழமுக்கம் வடக்கு நோக்கி நகர்ந்ததனால் எமக்கு எத்தகைய பயனையும் தரவில்லை.

எங்களின்( வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள்) விவசாய, நீர்ப்பாசன, நீர்வழங்கல் என தரைமேற்பரப்பு மற்றும் தரைக்கீழ் நீருடன் தொடர்புடைய அனைத்து விடயங்களையும் தீர்மானிக்கும் ஆற்றல் மிகுந்ததாக வடகீழ்ப்பருவக்காற்றினால் கிடைக்கும் மழைவீழ்ச்சி விளங்குகிறது.

கடந்த  20 ஆம் திகதி வரையான நிலைமைகளின் படி, இவ்வாண்டு வடக்கு மாகாணத்தின் சராசரி மழைவீழ்ச்சியை விட (1240மி.மீ) 130 மி.மீ. மழைவீழ்ச்சியை கூடுதலாக நாம் பெற்றுவிட்டோம். 

வழமையாக வடக்கு மாகாணத்தின் ஆண்டு மொத்த மழைவீழ்ச்சியில் 65% பங்களிப்பு செய்யும் வடகீழ் பருவக்காற்று இவ்வாண்டு 22% மட்டுமே பங்களித்துள்ளது. இதற்கு காரணம் இவ்வாண்டு முழுவதும் பரவலாக எமக்கு கிடைத்த மழைவீழ்ச்சியே. 

ஆனால் பெருநிலப்பரப்பின் பல குளங்கள் தமது கொள்ளளவில் அரைப்பகுதியைக் கூட பூர்த்தி செய்யவில்லை. வன்னியின் பல பகுதிகளில் வயல்களுக்கு தற்போதே நீர்ப்பாசன வசதிகளை வழங்கவேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்த நிலை நீடித்தால் தற்போது பயிரிடப்பட்டிருக்கும் நெற்பயிர்செய்கைக்கு அதன் விளைவு காலத்தில் கூட நீர் வழங்க முடியாத நீர்ப்பற்றாக்குறையை நாம் எதிர்கொள்ள நேரும். 

அடுத்த வருட சிறு போகத்தை பற்றி சிந்திக்க கூட முடியாத நிலை ஏற்படும். மழையை நம்பி மட்டுமே மேற்கொள்ளப்படும் யாழ்ப்பாண மாவட்ட நெற்செய்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பயிர்கள் வாடிவிட்டன.

இத்தகைய சூழ்நிலையில் எதிர்வரும் வாரங்களில் எமக்கு நிச்சயமாக ஒரு பெரு மழை அவசியம். தற்போதைய வளிமண்டல நிலைமைகளின் படி எமக்கு மழை கிடைக்கும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. 

எனினும் வளிமண்டல நிலைமைகள் பல்வேறு காரணங்களால் மாற்றமடையலாம். பூகோள காலநிலை மாற்றம் உலகளாவிய ரீதியில் மழைவீழ்ச்சியில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. எமது மழைவீழ்ச்சிப் பாங்கும் மாற்றமடைந்து வருகின்றது.

இத்தகைய நிலைமையில் எதிர்வரும் நாட்களில் எமக்கு மழை கிடைக்கவேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்போம் என்றார். 

No comments