நெடுந்தீவு கடற்தொழிலாளரின் வாடி எரிப்பானது, தோல்வி பயத்தில் அரசியல் எதிரிகள் வன்முறையை கையில் எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவில் கடற்தொழிலாளர் ஒருவரின் வாடி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டது. அதன் போது சுமார் 15 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகி உள்ளன.
அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நெடுந்தீவு பிரதேசபையின் வட்டாரம் 2ல் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் பாக்கியநாதர் எயுசேவியரின், 15 லட்சம் ரூபாய் பெறுமதியான கடற்றொழில் உபகரணங்களும், அவரது வாடியும் விசமிகளால் எரியூட்டப்பட்டுள்ளது.
தேர்தல் ஜனநாயகத்தை மதிக்காத அரசியல் விசமிகளின் இச் செயலை மிகக்கடுமையாக கண்டிக்கிறோம்.
நெடுந்தீவில் இழைக்கப்பட்டுள்ள முதலாவது தேர்தல் வன்முறைச் செயலான இச்சம்பவம் தொடர்பாக நெடுந்தீவு பொலீசார், கிராம சேவகர், பிரதேச செயலகம் ஆகியவற்றிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணைக்குழுவுக்கும் உரிய முறைப்பாடுகள் செய்யப்படவுள்ளன.
செய்யும் தொழிலை தெய்வம் என மதிக்கும் மக்கள் வாழும் நெடுந்தீவில் இப்படியான ஈனச் செயலை செய்வோரை இனங்கண்டு அவர்களை நெடுந்தீவு மக்கள் விரட்டுவார்கள் என்பது திண்ணம்.
வன்முறையை மூலதனமாக கொண்டு அரசியல் செய்யலாம் என்ற நப்பாசையில் செயற்படும் இவர்களை நாம் கோழைகளாகவே கருதுகிறோம்.
மீண்டும் வன்முறைக் கலாச்சாரத்தை உருவாக்கி அச்சத்தின் மத்தியில் மக்களது அரசியல் உரிமையை விலைபேசலாம் என நினைப்போருக்கு மக்கள் நிச்சயமாக தக்க பதிலை கொடுப்பார்கள்.
அன்புச்சகோதரர் பாக்கியநாதர் எயுசேவியர் அவர்களுக்கு நீதி கிடைக்க நாம் என்றும் துணைநிற்போம். எம்மோடு நெடுந்தீவுவாழ் மக்களும் துணைநிற்பார்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments