யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் சமுர்த்தி உத்தியோகத்தர் என கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் தற்போது ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடமாடுவதாகவும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
சமுர்த்தி கொடுப்பனவு பெறும் முதியவர்களையும், அரசினால் வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவினை பெறும் முதியவர்களையும் இலக்கு வைத்து ஒரு குழு பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றது
புதிதாக வந்த சமுர்த்தி உத்தியோகத்தர் என தம்மை அறிமுகப்படுத்தி 20,000 ரூபாய் எம்மிடம் தந்தால் மாதாந்தம் ஒரு தொகை கொடுப்பனவு வழங்குவோம் என கூறி முதியவர்களிடம் பணம் பறித்து செல்லும் சம்பவங்கள் உடுவில், கோப்பாய், வேலணை உள்ளிட்ட பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அண்மைய நாட்களில் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை ஊர்காவற்துறை பகுதியில் உள்ள சில வீடுகளுக்கு இக்கும்பல் சென்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களை விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
குறித்த நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் , பொலிஸாருக்கோ , கிராம சேவையாளருக்கோ , பிரதேச செயலக அதிகாரிகளுக்கோ உடனடியாக தகவல் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
No comments