பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியில் மரதன் ஓட்டப் போட்டிக்காக மாணவர்களை ஏற்றி பயணித்த கப் ரக வாகனம் விபத்துக்கு உள்ளானதில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சி , இயக்கச்சி பகுதியில் இருந்து பளை நோக்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை மாணவர்களை ஏற்றி சென்ற கப் வாகனம் யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் புதுக்காட்டு சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளானது.
வாகனம் விபத்துக்கு உள்ளான போது, வாகனத்தின் பின் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு கூடாரம் கழன்றதால், பின்னால் இருந்த மாணவர்கள் கூடாரத்துடன் வீதியில் தூக்கி வீசப்பட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , 3 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , கப் ரக வாகன சாரதியை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.