Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நீரே வராத மகாவலி ஆற்றுத்திட்டத்திற்கு புதிய வலயம் எதற்கு?


வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவையும் முல்லைத்தீவு மாவட்டத்தையும் மையப்படுத்தி மகாவலி ஜெ வலயம் என்ற பெயரில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் புதிய வலயம் ஒன்றைத் தோற்றுவிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. ஏற்கனவே மகாவலி ஆற்றின் நீர் வடக்கு மாகாணத்திற்கு வருவதற்கு சாத்தியமேயில்லை என்று மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் தெரிவித்துள்ள நிலையில் புதிதாக உருவாக்கப்படும் ஜெ வலயத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை உருவாக்குவதற்கான முயற்சியா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

நாடு சுதந்திரமடைந்த பின்பு, பல இலட்சம் மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக்கி, அவர்களை நாடுகடத்தினீர்கள். பின்னர் இனக்கலவரங்கள் என்ற பெயரில் தென்பகுதியில் இருந்த தமிழ் மக்களைக் கொன்று, அவர்களது வியாபாரம், சொத்துகளை அழித்து, அவர்களது பூர்வீகத் தாயகமான வடக்கு-கிழக்கிற்குத் துரத்தினீர்கள். பின்னர் யுத்தம் ஒன்றைத் தொடங்கி, வடக்கு-கிழக்குத் தமிழர்களை உலகெங்கும் அகதிகளாகத் துரத்தினீர்கள். அவர்களது காணிகளைப் பறிமுதல் செய்து சிங்கள மக்களைக் குடியேற்றினீர்கள்.

இன்று தமிழ் மக்களின் பூர்வீக நிலமான முல்லைத்தீவு மணலாற்றை மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில், சிங்கள மக்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்து இதற்கு வெலிஓயா என்று பெயரையும் சூட்டியுள்ளீர்கள். மகாவலி எல் வலயம் என்று சொல்லப்படும் இந்தப் பிரதேசத்திற்கு இதுவரையில் மகாவலி நீர் எட்டிப்பார்த்ததும் கிடையாது. எட்டிப்பார்க்கப் போவதுமில்லை. மாறாக, அந்நிலங்களில் பூர்வீகமாக பயிர்செய்த தமிழ் மக்களின் காணிகள் பறிமுதல் செய்யப்பட்டு, சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.

இன்று மகாவலி எல் வலயத்திற்கே அந்நதியின் நீர் வராத நிலையில், நெடுங்கேணி, மாங்குளம், வவுனிக்குளம், துணுக்காய் போன்ற பிரதேசங்களை உள்ளடக்கி மகாவலி ஜே என்னும் புதியதோர் வலயத்தை உருவாக்குகிறீர்கள். இதுவும் எல் வலயம் போன்று சிங்களக் குடியேற்றங்களுக்கே தவிர, இங்கு மகாவலி நீர் வரப்போவது கிடையாது. இந்த புதிய வலயம் தொடங்குவதற்கு முன்பாகவே, நெடுங்கேணியில் 1000ஏக்கர் நிலத்தை சீனக்கம்பெனியின் பினாமி நிறுவனமான தாய்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிற்கு, கரும்பு பயிருடுவதற்கு கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ள நிலங்கள் ஏற்கனவே மத்தியதர வகுப்பினருக்குப் பிரித்து வழங்கப்பட்ட நிலங்கள் ஆகும். யுத்தத்தின் காரணமாக அந்த நிலங்கள் காடுமண்டிப்போக, அவற்றை வன இலாகாவிற்குச் சொந்தமான காணிகள் எனக்கூறி, அவற்றை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கதும் கண்டனத்திற்குரியதுமாகும். இவ்வாறான கரும்பு பயிரிடுவதற்கு எத்தனையாயிரம் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்படும் என்பது யாருக்கும் தெரியாது. மணாலாற்றிற்கு நேர்ந்ததுதான் நெடுங்கேணி, மாங்குளம், வவுனிக்குளம் போன்றவற்றிற்கும் ஏற்படும் என்பதை தமிழ் மக்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் மனதில் கொள்ளவேண்டும். ஏற்கனவே திருகோணமலையைச் சுற்றிவளைத்து சிங்களக் குடியேற்றத்தின் மூலம், எவ்வாறு சேருவாவில என்ற சிங்கள தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டதோ, அதே போல வவுனியாவைச் சுற்றிவளைத்து, சிங்கள குடியேற்றங்களைக் கொண்டுவருவதற்கான ஒரு திட்டமாகவே இது இருக்கின்றது.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், மகாவலி அபிவிருத்தி என்பது முழுக்க முழுக்க சிங்கள குடியேற்றங்களுக்கே என்பதை தமிழ்க் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும். மிகப் பாரிய விவசாய நிலப்பரப்பைக் கொண்ட வன்னி மண்ணைப் பாதுகாப்பதன் ஊடாக தமிழ் மக்களின் விவசாயம், பொருளாதாரத்தை நிலைநிறுத்த முடியும். மாறாக இவற்றை வெளிநாட்டுக் கொம்பனிகளுக்கு விற்பதனூடாக அரசாங்கம் ஏதோவொரு வகையில் தான் நினைத்ததை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விவசாய நிலங்களைத் தாரை வார்ப்பதை தமிழ் மக்கள் முற்றுமுழுதாக நிராகரிப்பதுடன், வடக்கு மாகாண தமிழ் மக்களுக்கு மகாவலி அபிவிருத்தி சபை தேவையில்லை என்பதையும் அரசாங்கம் புரிந்துகொண்டு, அதனை வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோருகின்றோம். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments