கோப்புப்படம்
வவுனியா நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பட்டிக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டதில் , அப்பகுதியை சேர்ந்த அழகையா மகேஸ்வரன் (வயது 58) என்பவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கொலை சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , உயிரிழந்தவருக்கும் , சந்தேகநபருக்கும் இடையில் காணி எல்லை தொடர்பில் நீண்டகாலமாக முரண்பாடு நிலவி வந்துள்ளது.
நேற்றைய தினமும் இருவருக்கும் இடையில் காணி எல்லை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி , சந்தேகநபர் கல் வீச்சில் ஈடுபட்டுள்ளார். அதன் போது உயிரிழந்த நபர் மண்வெட்டியால் சந்தேக நபரை தாக்க முற்பட்ட வேளை அங்கிருந்து தப்பி சென்ற சந்தேகநபர் , தனது வீட்டுக்கு சென்று இடியன் துப்பாக்கியை எடுத்து வந்து சுட்டுள்ளார். துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். என தெரியவந்துள்ளது.
அதேவேளை சந்தேக நபர் இடியன் துப்பாக்கியை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு , வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை குற்றத்தை ஏற்றுக்கொண்டு நீதிமன்றில் தண்டப்பணம் செலுத்தியுள்ளார்.
அதன் பின்னர் மீண்டும் புதிதாக இடியன் துப்பாக்கியை கொள்வனவு செய்து வீட்டில் வைத்திருந்த நிலையிலையே நேற்றைய தினம் அதனை எடுத்து சென்று நபர் ஒருவரை படுகொலை செய்துள்ளார் என்றும் , சந்தேக நபர் மீது 5 வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments