வவுனியாவில் வீடொன்றினுள் புகுந்த காடையர்கள் , வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு , அவர்களுக்கு தீ வைத்துள்ளனர்.
சம்பவத்தில் பாத்திமா சம்மா சப்தீர் (வயது 21) எனும் குடும்ப பெண் உயிரிழந்துள்ளதுடன் , 2 வயது குழந்தை , 07 மற்றும் 13 வயதுடைய இரு சிறுமிகள் , 19 - 41 வயதுக்கு இடைப்பட்ட நான்கு பெண்கள் மற்றும் 42 வயது மற்றும் 36 வயதுடைய இரு ஆண்கள் என 09 பேர் தீக்காயங்கள் மற்றும் , வாள் வெட்டு காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா தோணிக்கல் பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் சிறுமி ஒருவருக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிறந்தநாள் ஆகும். அதனை முன்னிட்டு நள்ளிரவு 12 மணியளவில் குடும்பமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்நிலையில் இன்றைய தினம் அதிகாலை வீட்டினுள் அத்துமீறி நுழைந்த காடையர்கள் வீட்டின் உரிமையாளர் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர்.
பின்னர் வீட்டில் இருந்த குழந்தைகள், சிறுவர்கள் , பெண்கள் உள்ளிட்ட 10 பேர் மீது சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டு வாள் வெட்டு தாக்குதலையும் மேற்கொண்டு விட்டு , அவர்களுக்கும் , வீட்டிற்கும் தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவத்தில் வாள் வெட்டு மற்றும் தீக்காயங்களுக்கு உள்ளான 21 வயதான இளம் குடும்ப பெண் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். காயமடைந்த ஏனைய 09 பேரையும் அயலவர்கள் மீட்டு , வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , விசேட பொலிஸ் குழுக்களும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments