கிளிநொச்சி சித்த மத்திய மருந்தகத்தில் குரங்கு தொல்லை காரணமாக மருத்துவ சேவையை தாம் பெற்றுக்கொள்வதில் இடர்களை எதிர்கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அது தொடர்பில் அப்பகுதி மக்கள் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
பகல் மற்றும் இரவு வேளைகளில் குரங்குகள் மருந்தகத்திற்குள் நுழைந்து மருதகத்தை சேதப்படுத்துவதால் பல மருந்துகள் பயன்படுத்த முடியாத நிலையில் வைத்தியசாலையில் காணப்படுவதாகவும் இதனால் வைத்திய தேவைக்காக செல்பவர்களுக்கு உரிய மருந்துகள் அங்கு கிடைப்பதில்லை.
இதேவேளை மருந்தக நிர்வாகத்தினர் வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் குரங்கு தொல்லை தொடர்பிலும் வடமாகாண ஆளுநர் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களத்துக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தமக்கு தெரிவித்துள்ள போதும் இதுவரை எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
அதனால் நாமே வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநருக்கு பி.எஸ் .எம்.சாள்ஸுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளோம்.
மருந்தகத்திற்கு நிரந்தர கட்டிடம் இல்லாத நிலையில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் நிலையத்தின் கட்டிடத்திலே தற்காலிகமாக குறித்த மருந்தகம் இயங்கி வருகின்றது.
எனினும் குறித்த கட்டிடத்தின் அபிவிருத்தி பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் நிலையத்தின் கூரைத்தகடுகள் குரங்குகளால் சேதமாக்கப்பட்ட நிலையில் தற்போது கழண்டு விழும் நிலையில் காணப்படுவதால் அங்கு பணியாற்றுபவர்கள் மற்றும் வைத்திய சேவையினை பெறசெல்பவர்கள் உயிர் ஆபத்தினை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை தற்பொழுது மருந்தகத்திற்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதனால் வைத்தியசாலைக்கு வழங்கும் மருந்துகளின் அளவுகளினை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்பதுடன் குறித்த சித்த மருத்துவ நிலையத்தின் அடிப்படையான திருத்த வேலைகளை உடனடியாக மேற்கொண்டு மீண்டும் கிளிநொச்சி மாவட்டத்திற்கான சிறந்த மருத்துவ சேவையினை வழங்கும் நிலையமாக குறித்த மருந்தகத்தை மாற்றி அமைத்து தருமாறும் கோரியுள்ளனர்.
No comments