Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இலங்கையைக் கண்காணிக்க வேண்டும்


இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆவண செய்ய வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

இந்திய அரசாங்கம் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு தரப்பு என்ற அடிப்படையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதற்கு முழுமையான தார்மீக உரிமை இருக்கிறது என்பதை இந்தியப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

எமது கடிதத்தில் தெரிவித்திருந்ததைப் போன்றே இந்தியப் பிரதமர் திரு. மோடி அவர்களும் இலங்கை ஜனாதிபதிக்கு மேற்கண்ட விடயங்களைத் தெளிவாக எடுத்துரைத்திருந்தது மாத்திரமல்லாமல், இலங்கை தமிழ் மக்கள் கண்ணியமாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு அவர்களது அபிலாஷைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட வேண்டும்.

அதற்கு 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாணசபை தேர்தல்களை நடாத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதுடன் அதனை இலங்கை அரசு செய்யும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன், இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையின் பாதுகாப்பு என்பவை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தது என்றும் இந்துமகா சமுத்திரத்தின் பாதுகாப்பிற்கும் அது முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளதுடன், வடக்கு-கிழக்கு அபிவிருத்திக்கு இந்திய அரசு தொடர்ந்தும் உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 36 வருடங்கள் கடந்துள்ள இன்றைய நிலையிலும் அதில் அடங்கிய விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலையிலேயே இந்தியா இருக்கிறது என்பதையும் நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக டெல்லியில் ஒப்புக்கொண்டாலும் மாறிமாறி ஆட்சி செய்யும் இலங்கை அரசாங்கங்கள் அதனை இழுத்தடித்து வருவதையே நாங்கள் பல காலமாகப் பார்த்து வருகிறோம்.

பல்வேறு காரணங்களைக் கூறி அதை நடைமுறைப்படுத்துவதிலிருந்து தப்பித்து வருவதையும் பார்த்திருக்கின்றோம். இந்த முறையும் அவ்வாறில்லாமல், அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்கு இந்தியா ஒரு பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்பதுடன், குறிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் இவை நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் நாம் கோருகிறோம்.

மலையக தமிழ் மக்கள் இந்த மண்ணில் குடியேறி 200 வருடங்கள் முடிவடையும் இன்றைய காலகட்டத்தில் சரியான ஊதியமில்லாமல், வாழ்விடங்களில்லாமல் இன்னமும் லயன்களில் அடிமைகளாக வாழ்கின்ற சூழ்நிலையில் அவர்களுடைய அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் 75 கோடி ரூபாய்களை வழங்குவது வரவேற்பிற்குரியதும் பாராட்டுக்குரியதுமாகும்.

மலையக மக்கள் கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கான உதவிகளையும் ஒத்தாசைகளையும் இந்தியா தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இலங்கை ஜனாதிபதியும் தமிழ் மக்களுக்கும் இந்திய அரசுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை காலம் கடத்தாது முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் நாம் எதிர்பார்க்கிறோம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments