ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உரிய அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது நாட்டிலுள்ள கல்வித்துறையில் 40,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது.
ஊரிய அனுமதி இன்றி 5000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நாட்டிலிருந்து வெளியேறி இருக்கின்றார்கள்.
கடந்த காலங்களில் அரச ஊழியர்கள் 5 வருட விடுமுறையில் வெளிநாடுகளுக்கு செல்லலாம் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதற்கமைவாக கல்வித்துறையில் உள்ள அதிபர்கள் ஆசிரியர்கள் இந்த விடுமுறையை பெற்றுக்கொள்ள தீர்மானித்தார்கள்.
இந்த நிலையை ஏற்படுத்தியது அரசாங்கம். இவ்வாறு கல்வி துறையில் இருந்து வெளியேறியுள்ள ஆசிரியர்களின் வெற்றிடங்களுக்கு ஆசிரியர்;களை இணைத்துக்கொள்ள மாகாண சபைகளுக்கு அனுமதி வழங்குவதாக கூறப்படுகின்றது.
இதன்மூலம் அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் கிடைப்பார்களா? அடுத்த வருடம் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு இடம்பெறாது என்று நிதி அமைச்சு செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டிருக்கின்றார்.
அவ்வாறு அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு இல்லையென்றால் அடுத்த வருடத்தில் ஆசிரியர் சேவைக்கும் ஆட்சேர்ப்பு இடம்பெறாதா என்பதை நிதி அமைச்சு செயலாளரிடம் கேட்க விரும்புகின்றேன்.
இது மிகவும் பாரதூரமான பிரச்சினை ஆகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments