வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர் எனும் குற்றச்சாட்டில் , யாழ்ப்பாண பல்கலைக்கழக பெரும்பான்மையின மாணவர்கள் இருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் எனவும் , போதைப்பொருள் கொள்வனவுக்காகவே வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சூழல் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்று இருவர் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.
அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் கொள்ளையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்களை நேற்றைய தினம் வியாழக்கிழமை பொலிஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருவரும் பல்கலைக்கழக மாணவர்கள் எனவும் , போதைக்கு அடிமையான நிலையில் போதைப்பொருளை கொள்வனவு செய்வதற்காகவும் வழிப்பறிகளில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இருவரையும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments