இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 10. 30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்ட நிறைவில் கடற்தொழிலாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு யாழ் மாவட்ட செயலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
யாழ் மாவட்டத்தில் 23154 கடற்றொழில் புரியும் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் யாழ் மாவட்ட கடற் பகுதியில் தமது அன்றாட வாழ்வாதாரத்தினை மேற்கொள்கின்றனர்.
இக் கடலினை நம்பியே தமது குடும்ப வாழ்வினை மேற்கொண்டுவருகின்றனர். இந் நிலையில், தற்போது இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய வருகையினால் சொல்லொண்ணா துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
கடந்த காலங்களில், இலங்கை இந்திய மீனவர்கள் பல்வேறு கட்டப் பேச்சு வார்த்தைகளை பல்வேறு இடங்களில் மேற்கொண்டனர். இறுதியல், இவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன. இவை தொடர்பாக எதுவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
எனவே, இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய அடாவடித்தனமான தொழில் முறையினை உடனடியாக நிறுத்தி. எமது நாட்டின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து எமது கடல் வளங்களை அழித்தும், சூறையாடியும், எமது மீனவர்களின் தொழில் உபகரணங்களை அழித்து செல்வதனையும் உடனடியாக தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இவ் இழுவை மடித் தொழிலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் நாம் தொடர் போராட்டங்களை மேற்கொள்ளத் தீர்மானித்து உள்ளோம் என்பதனையும் தங்களுக்கு தயவுடன் அறியத்தருகின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments