யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்புவதாக கூறி 21 இலட்ச ரூபாய் மோசடி செய்த பல்கலைக்கழக உத்தியோகஸ்தரும் , அவரது கணவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , இருவரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
அது தொடர்பில் தெரியவருவதாவது,
தென் பகுதியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தகவல் தொடர்பாடல் உத்தியோகஸ்தராக கடமையாற்றும் பெண்ணொருவர் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை கனடா நாட்டுக்கு அனுப்புவதாக கூறி 21 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார்.
அது தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் முறையிட்டதை அடுத்து , முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபரான பெண்ணை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த மோசடி சம்பவத்துடன் , அவரது கணவனுக்கும் தொடர்பு இருப்பதனை கண்டறிந்து கணவனையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
No comments