யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் புகையிலை விவசாயிகளிடம் புகையிலையை கொள்வனவு செய்து விட்டு , அதற்கான பணத்தை கொடுக்காது ஒருவர் ஏமாற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அது குறித்து தெரியவருவதாவது,
புகையிலை விவசாயிகளிடம் , வியாபரிகள் புகையிலையை தோட்டத்துடன் பேரம் பேசி அதனை ஒரு விலைக்கு வாங்கி , அறுவடை செய்து கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு புகையிலை கொண்டு கொண்டு சென்று விற்பனை செய்வார்கள்.
அவ்வாறான வேளைகளில் சிலர் பேசிய பணத்தினை உடனேயே விவசாயிகளிடம் கையளித்து விடுவார்கள். சில வியாபாரிகள் புகையிலை விற்று காசு தாறேன் என சில வாரங்களை அவகாசமாக கேட்பார்கள். அதற்கு விவசாயிகள் சம்மதித்தால் புகையிலையை வாங்கி செல்வார்கள். அதன் போது எழுத்து மூலமான அல்லது சட்ட ரீதியான எந்த ஒப்பந்தமும் இல்லாது நம்பிக்கை அடிப்படையிலையே அந்த கொடுக்கல் வாங்கல் நடைபெறும்.
அந்நிலையில் ஊர்காவற்துறையை சேர்ந்த சுமார் 25 புகையிலை விவசாயிகளிடம் சுமார் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான புகையிலைகளை கொள்வனவு செய்தவர், அதற்கான பணத்தினை புகையிலையை விற்று தருகிறேன் என கூறி வாங்கி சென்று 2 மாதங்களுக்கு மேலாகியும் பணத்தினை கொடுக்கவில்லை.
அதனால் தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் முறையிட்டதை அடுத்து , பொலிஸார் குறித்த வியாபாரியை விசாரணைக்கு அழைத்த போது , தனது சட்டத்தரணியுடன் சமூகம் அளித்தார்.
விசாரணைகளின் போது , தான் வாங்கிய புகையிலையை விற்பனை செய்வில்லை எனவும், அதனால் இன்னமும் இரு மாத கால அவகாசம் தந்தால் , புகையிலைக்கான காசினை கொடுக்க தயார் என கூறியுள்ளார். அத்துடன் தனது சட்டத்தரணி ஊடாக சத்திய கடதாசி முடித்து கொடுக்கவும் தயார் என கூறியுள்ளார்.
அதற்கு விவசாயிகளும் சம்மதித்ததை தொடர்ந்து, இரு மாத கால பகுதிக்குள் பணம் தராவிடின் நீதிமன்றில் வழக்கு தொடருங்கள் என விவசாயிகளுக்கு அறிவுறுத்திய பொலிஸார் , வியாபாரங்களின் போது , வாய் வார்த்தை நம்பிக்கையை விட சட்ட ரீதியான ஒப்பந்தங்களை மேற்கொள்ளுங்கள் எனவும் விவசாயிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தினர்.
No comments