யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கணவன் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
நாவற்குழி ஐயனார் கோயிலடியில் வசிக்கும் அஜந்தன் யமுனா (வயது 23) என்கிற இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில் வீட்டில் கணவனை காணாத நிலையில், கணவனே கொலையாளி எனும் பொலிஸாரின் சந்தேகம் வலுத்தது.
அதனை அடுத்து, கணவரை பொலிஸார் தேடி வந்தனர். அந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அண்மையில் முச்சக்கரவண்டியில் சந்தேகநபர் தப்பிக்க முற்பட்ட வேளையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில் "தான் மனைவியை தாக்கிய பின்னர், வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், மணைவி உயிரிழந்தது தனக்கு தெரியாது" என சந்தேக நபர் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைதான சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
No comments