ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுஜித் பெரேராவினால், நாடாளுமன்றில் வைத்து தான் தாக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சபையில் தெரிவித்தார்.
இது குறித்து குற்றம் சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா சபையில் விளக்கமளித்திருந்தார்.
அதன்போது, “நான் தாக்குதல் நடத்தியதாக டயனா கமகே தெரிவித்தார். அப்படி எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லை.
நான் கீழே இறங்கும்போது, அவர் அநாகரீகமான வார்த்தைகளால் ரோஹண பண்டார உறுப்பினருடன் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
இதன்போது நான், அவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டாம் எனக் கூறினேன். இதனைப் பொருட்படுத்தாத அவர் என்மீது தாக்குதல் நடத்தினார்.
நான் அப்போது அந்தத் தாக்குதலை தடுக்க மட்டும்தான் முற்பட்டேன். இதுதொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளை பார்வையிட்டால் டயனா கமகே எவ்வாறு செயற்பட்டார் என்பதை அறிந்துக் கொள்ள முடியும் என கூறினார்.
சபைக்குள் நாம் ஒரு கருத்தை கூறினால், அதுதொடர்பாக வெளியே கதைக்கக்கூடாது.
நான் அமைதியாக மின்தூக்கி அருகில் செல்லும்போது, டயனா கமகே கடுமையான வார்த்தைகள் தூற்றிக் கொண்டிருந்தார். நான் அதனைக் கவனத்தில் கொள்ளாமல் நகர்ந்தபோது, அவர் என் பின்பாக வந்து அநாகரீகமான வார்த்தைகளால் என்னை தூற்றினார்.
பெண் உரிமை தொடர்பாக கதைக்கிறோம். அதேநேரம், பெண்களினால் ஆண்களின் உரிமைகள் பாதிக்கப்படுவது தொடர்பாகவும் கதைக்க வேண்டும்.
நாடாளுமன்றில் நடந்த பிரச்சினையை வெளியே கொண்டு சென்றதே தவறாகும். ஆண்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்” என கூறியிருந்தார்.
No comments