யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிசாரின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக வட்டுக்கோட்டை பொலிஸார் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சித்தங்கேணி பகுதியை சேர்ந்த ந. அலெக்ஸ் (வயது 26) எனும் இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இளைஞனை கைது செய்த வட்டுக்கோட்டை பொலிஸார் இளைஞனை கடுமையாக தாக்கி சித்திரவதை புரிந்தமையால் தான் இளைஞன் உயிரிழந்தார் என இளைஞனின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதேவேளை பொலிஸார் தன்னை எவ்வாறு சித்திரவதை புரிந்தார்கள் என உயிரிழந்த இளைஞன் கூடிய காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன.
அந்நிலையில் பொலிஸார் மீது உறவினர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழு விசாரணைகளை ஆரம்பித்து உள்ள நிலையில் , விசாரணைக்கு ஏதுவாக உடன் அமுலுக்கு வரும் வகையில் , வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு போலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை உயிரிழந்த இளைஞன் சடலம் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments