யாழ்ப்பாண பல்கலை கழக மாணவிகளுக்கு தனது ஆணுறுப்பை காட்டி , பாலியல் சேட்டைகளில் ஈடுபட்ட நபர் ஒருவரின் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
குறித்த காணொளியை பல்கலைக்கழக மாணவி ஒருவரே தனது கையடக்க தொலைபேசியில் எடுத்து தனது நண்பர்கள் ஊடாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாகவும் , காணொளி ஆதாரத்தின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண பல்கலை கழகத்திற்கு அருகில் மாணவிகளின் விடுதிகள் உள்ளன. குறித்த பகுதிகளில் ஆள் நடமாட்டம் குறைவாக காணப்படுவதால் , அங்கு பலர் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வருவதாக பல தடவைகள் மாணவிகளால் உரிய தரப்புக்களுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவிகளின் விடுதிகள் அடுக்குமாடி கட்டடங்களாக காணப்படும் நிலையில் முன்னிரவு வேளைகளில் விடுதிக்கு அருகில் வீதியில் கூடும் சிலர் வீதியில் நின்று விடுதியில் உள்ள மாணவிகளுடன் சைகை ரீதியில் பாலியல் சேட்டைகளில் ஈடுபடுகின்றனர்.
அத்துடன் பகல் வேளைகளில் மாணவிகள் விடுதியில் இருந்து பல்கலைக்கழகம் செல்லும் வேளைகளில் தமது ஆணுறுப்பை காட்டுவது உள்ளிட்ட சேட்டைகளிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் மாணவிகள் பல தடவைகள் முறையிட்டு உள்ளனர். அத்துடன் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கும் மாணவ பிரதிநிதிகள் பல்வேறு தடவைகள் மாணவிகள் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பில் முறையிட்டுள்ளனர்.
பொலிஸாரிடம் முறையிட்ட பின்னர் சில நாட்கள் பொலிஸார் அப்பகுதியில் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அவ்வேளைகளில் பாலியல் சேட்டை விடுபவர்களின் தொந்தரவு குறைந்து காணப்படும். பின்னர் பொலிஸார் தமது சுற்றுக்காவல் நடவடிக்கையை கைவிட்ட பின்னர் , மீண்டும் பாலியல் சேட்டை விடுபவர்களின் நடமாட்டம் அதிகரிக்கும்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆத்திசூடி வீதியில் மோட்டார் சைக்கிளில் ஆணுறுப்பை காட்டியவாறு பல்கலைக்கழக மாணவியை பின்தொடர்ந்த ஒருவரை பல்கலைக்கழக மாணவி ஒருவர் துணிகரமாக காணொளி பதிவு செய்து,அதனை சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளார்.
அந்த காணொளியில், மாணவி தன்னை காணொளி எடுக்கிறார் என்பதனை அவதானித்த குறித்த நபர் மோட்டார் சைக்கிளை திருப்பி கொண்டு செல்வதை காணொளியில் அவதானிக்க முடிந்தது.
No comments