யாழில் முகமூடி கொள்ளையர்களின் முகமூடியை கழட்டிய பெண்ணை கொலை செய்யும் நோக்குடன் தாக்கி விட்டு கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளார்கள்.
தெல்லிப்பளை - கட்டுவான் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த வீட்டில் பெண்ணொருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் வசித்து வரும் நிலையில் , நேற்றைய தினம் இரவு கடும் மழை பெய்து கொண்டிருந்த வேளை முக மூடி அணிந்த கொள்ளை கும்பல் ஒன்று வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளையிட முயன்றுள்ளனர்.
அதன் போது அப்பெண் கொள்ளையர்களுடன் முரண்பட்டு , தனது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிக்கொண்டிருந்த கொள்ளையனின் முகமூடியை கழட்டியுள்ளார்.
தனது முகமூடி கழன்றதை அடுத்து , பெண்ணின் கழுத்தில் கத்தியால் வெட்டி விட்டு, அப்பெண்ணை கீழே தள்ளி விட்டு கொள்ளையர்கள் தமது கொள்ளை முயற்சியை கை விட்டு தப்பி சென்றுள்ளனர்.
அதனை அடுத்து பிள்ளைகள் அயலவர்களுக்கு தகவல் தெரிவித்து, அயலவர்கள் உதவியுடன் கழுத்தில் காயமேற்பட்ட பெண் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments