Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஜா - எல பகுதியில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் இறுதி கிரியைகள் யாழில்


ஜா-அல பகுதியில் கால்வாயில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை கைது செய்ய சென்ற வேளை  நீரில் மூழ்கி உயிரிழந்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் இறுதி கிரியைகள் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. 

ஜா-எல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி பிரதாபன் (வயது 26) என்ற பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் சேதவத்த கால்வாய்க்கு அருகில், கடந்த வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இறுதி கிரியைக்காக சடலம் அவரது சொந்த இடமான சாவகச்சேரிக்கு, நேற்றைய தினம் சனிக்கிழமை கொண்டு வரப்பட்டு , மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

அந்நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மேல்மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கலந்து கொண்டு உயிரிழந்தவருக்கு இறுதி மரியாதையை செலுத்தி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ஒரு தொகை பணத்தையும் கையளித்தார்.

அதன் போது, உயிரிழந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்  சார்ஜன்டாக பதவி உயர்வு பெற்றுள்ளதுடன் அவருக்குரிய கொடுப்பனவுகள் கிடைக்கபெறும் என மேல்மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் குடும்பத்தினருக்கு வாக்குறுதியளித்தார்.

  இறுதி நிகழ்வில் பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள், வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் பூதவுடல் அரச மரியாதையுடன் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

கடந்த வியாழக்கிழமை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மேலும் சில  பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஜா-எல பகுதியில் நீரோடை மூலம் தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை துரத்திச் சென்ற போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.   






No comments