சித்திரவதைக்கு உள்ளான நிலையில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விஞ்ஞான ரீதியான சான்றுகள் , தடயங்களை சேகரிக்கும் முகமாக நேற்றைய தினம் திங்கட்கிழமை விசாரணைகள் நடைபெற்றுள்ளன.
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது 25) எனும் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்தார்.
அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை மன்றில் தோன்றி சாட்சியம் அளித்தார்.
அதன் போது , தம்மை பொலிஸார் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று தாக்கி சித்தரவதை புரிந்தனர் என குறிப்பிட்டார்.
அதனை அடுத்து சாட்சி கூறிய இடங்களுக்கு சாட்சியை அழைத்து சென்று சம்பவ இடத்தில் விசாரணை செய்து , விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் , சாட்சியங்கள், தடயங்களை சேகரிக்குமாறு மன்று, பொலிஸாருக்கு கட்டளையிட்டது.
சாட்சியை தனியே பொலிஸாருடன் அனுப்புவது , பாதுகாப்பு இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் நலன்சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் மன்றில் கூறியதை அடுத்து , சாட்சியுடன் இரண்டு சட்டத்தரணிகள் செல்வதற்கு மன்று அனுமதி அளித்தது.
அந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சாட்சி கூறிய இடங்களுக்கு சாட்சியை நேரில் அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , தடயங்கள் , சான்றுகளை சேகரிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர்.
அதன் போது , சாட்சியின் பாதுகாப்பு கருதி இரண்டு சட்டத்தரணிகள் சாட்சியுடன் கூட இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments