யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 07 பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வடமராட்சி கிழக்கு , குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில், இரண்டு தரப்பினருக்கு இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் முரண்பாடு முற்றிய நிலையில் கடந்த இரண்டு தினங்களாக இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
குறித்த முதல் சம்பவத்தில் ஒரு தரப்பில் நால்வரும் மற்றைய தரப்பில் மூவருமாக 07 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை நேற்றைய தினம் புதன்கிழமை இரவு , ஒரு தரப்பினர் மற்றைய தரப்பின் மீது தாக்குதல் மேற்கொள்ள தயாரான போது , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் , அங்கு கூடியிருந்தவர்களை அப்புறப்படுத்தி வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
சில மணிநேரம் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பின்னர் பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் , அவ்விடத்தில் இருந்து திரும்பிய பின்னர் , மீண்டும் ஒன்று கூடிய சிலர் மற்றைய தரப்பினர்களின் வீடுகள் மீது கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments